பிரான்ஸின் முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயர் கற்பிக்காதீர்கள் - நிக்கோலா சர்கோஸி
பிரான்ஸின் தென்பகுதியில் துலூஸ் நகரிலும் சுற்றுவட்டகையிலுமாக ஏழு பேரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியின் வீட்டை பொலிசார் இட்டுவந்த முற்றுகை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இதில் முகமது மீரா என்ற 23 வயது சந்தேகநபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிரஞ்சு உள்துறை அமைச்சர் உறுதிசெய்துள்ளார்.
துலூஸ் நகரில் முகமது மீரா பதுங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை பிரஞ்சு பொலிசார் 32 நேரங்கள் முற்றுகையிட்டிருந்த நிலையில், முகமது மீரா சரணடைய மறுத்துவந்ததை அடுத்து, வியாழன் காலை பொலிசார் அந்தக் கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்திருந்தனர்.
தொடர்புடைய விடயங்கள்வன்முறை உள்ளே நுழைந்த பொலிசார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஜன்னல் வழியாக வெளியில் குதித்த மீரா இறந்து கிடந்துள்ளார். இவர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றபோது பொலிசார் இவரைச் சுற்றுக்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீரா சுட்டதில் பிரஞ்சு பொலிசார் இருவர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் முற்றுகையை அடுத்து அவரிடம் பேசிவந்த அதிகாரிகளிடம், அண்மையில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றின் வெளியில் நான்கு பேரையும், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பிரஞ்சு சிப்பாய்களையும் சுட்டுக்கொன்றது தானே என்று இவர் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
பாலஸ்தீன பிள்ளைகளுக்காகப் பழிவாங்குவதற்காக தான் இந்தக் கொலைகளைச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு அல்கைதா என்றும் பொலிசாரிடம் மீரா ஒப்புகொண்டுள்ளார்.
சர்கோஸி கருத்து - முகமது மீராவுக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸி கூறியுள்ளார். இந்த துப்பாக்கிதாரியின் செயல்களை அடிப்படையாக வைத்து பிரான்ஸின் முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயர் கற்பிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment