Header Ads



முஸ்லிம் நாடுகளின் ஆதரவுக்காக அமைச்சர் றிசாத், றிஸ்வி முப்தி, அகார் முஹம்மத் ஜெனீவா விரைகின்றனர்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
'விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் தற்போது, ஏனைய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்வது குறித்தும் நாடுகளுக்கு விளக்கவுள்ளதாக' அவர் கூறினார்.

குறித்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.

No comments

Powered by Blogger.