Header Ads



கல்வியிலும், பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்னடைவு - அமைச்சர் ரிஷாத்

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் உலக நாடுகள் பொருளாதார ரீதியான பிரச்சினைக்கு உள்ளாகிய போது ஈரான் இலங்கைக்கு உதவியளித்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது என கைத் தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற முதலாவது “குர்ஆனிய ஒலிம்பியாட்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்லாஹ்வுடைய கலாம் ஓதப்பட்டு பரிசில்களும் பாராட்டுக்களும் வழங்குகின்ற இந்த நல்ல வைபவத்திலே கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகின்றோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

பெரியளவில் இதனை ஏற்பாடு செய்து நடத்தி வரும் இலங்கைக்கான ஈரான் தூதுவராலயத்தை பாராட்டுகின்றேன். ஈரான் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடு மட்டுமல்ல சகல வழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்து வரும் நண்பனும் கூட.

இலங்கையில் யுத்தம் மும்முரமாக நடைபெற்ற போதும் சரி உலக நாடுகள் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஆளாகிய நிலையிலும் சரி இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்து வந்ததை யாரும் மறக்க முடியாது. அதற்காக ஈரானுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொருளாதார நெருக்கடியை நம் நாடு சந்தித்த போது எந்தவித வட்டியும் இல்லாமல் கடனாக எண்ணெயை எமக்கு தந்துதவியது. இதற்காக இந்நாட்டு முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் கெளரவமாக பார்க்கும் நிலைக்கு நிலவுகிறது.

ஈரானை அமெரிக்காவும் அதன் அனுசரணை நாடுகளும் இலக்கு வைத்து சீரழிக்கச் செயற்படுவதை காண்கின்றோம். ஆனால் அந்த மக்கள் ஒற்றுமைப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை நம்பியவர்களாகவும் தைரியமாக அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுக்க தயாராக உள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கடந்த ஆறு, ஏழு வருட கால அவரது ஆட்சியிலே இரு நாட்டுக்குமிடையிலான நட்புறவு மிகவும் இறுக்கமாகியுள்ளது. இதனை பிரிக்க அந்நிய நாடுகள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு சமய ரீதியாக உதவியளிக்கும் செயற்திட்டத்தின் முதற்படியாக முதற்கட்டமாக முதலாவது குர்ஆனிய ஒலிம்கபியாட் போட்டி எட்டு மாவட்டங்களில் நடைபெற்றது. எதிர்காலங்களில் சகல மாவட்டங்களிலும் இப்போட்டிகள் முன்னெடுக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்கதொன்றாகும் என்றார்.

நாடளாவிய ரீதியிலே வாழ்கின்ற முஸ்லிம்கள் சமூகம், கல்வி, கலை, கலாசார, பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது விடயத்தில் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் பங்கு இருக்கின்றது.

இன்று பல்கலைக்கழக தெரிவை பார்க்கின்ற போது குறைந்தளவு முஸ்லிம்கள்தான் தெரிவு செய்யப்படுகின்றார்கள். முஸ்லிம்களுடைய பொருளாதார வளர்ச்சியை பார்க்கின்ற போது குறிப்பாக ஐம்பது செல்வந்தரை பட்டியல் போடுகின்ற போது அதில் எமது சமூகத்தின் பங்கு மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் டாக்டர் நபி மொஹமட் ஹசனி பூர் மற்றும் ஈரான் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக இலங்கை பிரதிநிதி அஷ்ஷெய்க் ஹமீட் aஸா ஹக்கீகி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.