இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஆடம்பரச் செலவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, சிறிலங்கா பணத்தை வாரி இறைப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் கொமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதற்காக கடந்த ஆண்டு சென்.கிற்ஸ் தீவில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல நூறு மில்லியன் ரூபாவைக் கொட்டிப் பரப்புரை செய்து தோற்றுப் போனது.
அதற்கு இணையாக ஜெனிவாவில் சிறிலங்கா செலவிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்காவில் இருந்து சென்ற 52 பேர் கொண்ட குழுவினர் ஜெனிவாவில் மிகவும் ஆடம்பரமாக இன்ரர் கொன்ரினென்ரல் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இராஜதந்திர மையமான ஜெனிவாவின் மத்தியில் உள்ள இந்த விடுதி 18 மாடிகளைக் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள பூங்கா நிலப் பகுதியும், ஜெனிவா ஏரியும் இதன் அறைகளில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தலைமையகம், செம்பிறை அருங்காட்சியம், ஐ.நா தலைமையகம் என்பன இந்த விடுதிக்கு அருகிலேயே உள்ளன.
உலகில் மிகவும் செலவுமிக்க நகரங்களில் ஒன்றான ஜெனிவாவில், இந்த விடுதியின் சில கட்டணங்களை வைத்துப் பார்க்கும் போது, பெரியதொரு குழுவினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பாரியளவு நிதியை செலவிட்டுள்ளது என்பதை உணரமுடியும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறியதொரு குழுவினால் முக்கியமான சக்திகளை எதிர்கொள்வது சாத்தியமில்லையா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
இந்த விடுதியில் தனிநபர் ஒருவர் ஒரு இரவு தங்குவதற்கான ஆகக்குறைந்த அறை வாடகை 499 யூரோ (80,977 ரூபா) வாகும். மேலதிகமாக அதற்கு 75 யூரோ (12,171ரூபா) வரியையும் செலுத்த வேண்டும்.
இதன்படி ஒருநாள் இரவு தங்குவதற்கு நபர் ஒருவருக்கு சுமார் 1 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பத்து நாட்கள் தங்கியதற்காக ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான செலவு இதைவிட அதிகம்.
சொகுசு அறை ஒன்றில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு வாடகை 699 யூரோ (113,433 ரூபா) வும், வரியாக 75 யூரோவும் அறிவிடப்படுகிறது. junior suite எனப்படும் தங்கும் அறை ஒன்றுக்கு 999 யூரோவும் (162,117ரூபா) வரியாக 75 யூரோவும் அறவிடப்படுகிறது.
இங்கு ஒரு தேனீர் 8 யூரோ, தோடம்பழச்சாறு 1622 ரூபா, சிறியதொரு தண்ணீர்போத்தல் 1460 ரூபா. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஜெனிவா இராஜதந்திரிகளுக்கு இங்கு மதிய விருந்து வழங்கினார். 30 இராஜதந்திரிகளும் மிகப்பெரிய சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவும் இதில் பங்கேற்றது. இந்த விருந்துக்கு தலைக்கு 200 யூரோ (32,456 ரூபா) அறிவிடப்பட்டது.
இதைவிட, சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த சிலருக்கு தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், ஆடம்பர கறுப்பு நிற மெர்சிடெஸ் பென்ஸ் கார் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்குமே, தனித்தனியான கைபேசியும் வழங்கப்பட்டது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சிறிலங்காவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகளை விடவும், இதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை மிகவும் அதிகம். சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரியத் தொடங்கியுள்ள நேரத்தில் தான் இந்தளவு செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது
Post a Comment