Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏமாற்றம் - ஜனாதிபதியை சந்திக்காது அமைச்சரை சந்தித்து என்னபயன்..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் எந்தச் சூழ்நிலையிலும் புறக்கணிக்கும் போக்கில் செயற்பட முனையவில்லை எனத் தெரிவித்திருக்கும்  ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி செயலாளரும் பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மு.கா.வின் அதிருப்தியை களைவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பெற்றோலிய வள அமைச்சில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் நடத்திய சந்திப்பின்போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளருடன் இச்சந்திப்பு இடம்பெறவிருந்த போதிலும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தனது தொகுதியில் முக்கிய வைபவமென்பதில் பங்கேற்க வேண்டியேற்பட்டதால் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் இச் சந்திப்பு இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் குழுவில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் ஹசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எம். அஸ்லம், முத்தலிப் பாவா பாரூக் ஆகியோர் இடம்பெற்றனர்.

தமது நிலைமையை எடுத்துவிளக்கிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசுடன் நம்பிக்கை அடிப்படையிலேயே நாம் ஒன்றிணைந்தோம். கடந்த காலத்தைப் போன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் எதனையும் செய்து கொள்ளவில்லை. அரசின் அபிவிருத்தித் திட்டங்களை வரவேற்று ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே அரசுடன் இணைந்து கொண்டோம்.
ஆனால் ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் புறந்தள்ளப்பட்டு வருவதாக கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். ஊடகங்களில் கூட அவ்வாறான செய்திகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரச ஊடகங்களில் கூட அவ்வாறே செய்திகள் வருகின்றன.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் அரவணைக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்தித்திட்டங்களில் எமது எம்.பி.க்களின் யோசனைகள் நிராகரிக்கப்படுகின்றன. கிராமத்துக்கு ஒரு திட்டம் நிகழ்ச்சியிலும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் எமது எம்.பி.க்களின் பட்டியல்கள் உள்வாங்கப்படவில்லை. எமது மக்களின் கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் அரசாங்கத்தையும் காப்பாற்ற வேண்டும். அதேசமயம் கட்சியையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று ஆதங்கத்தை வெளியிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸை ஓரங்கட்ட முற்படவில்லை. தவறாக எண்ணவேண்டாம். எமது பங்காளிக் கட்சியாக உங்கள் கட்சியை எண்ணுகின்றோம். நீங்கள் தெரிவிக்கும் குறைபாடுகள் குறித்து உடனடிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றேன். அதன் போது நல்ல தீர்வை எட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்  எனத் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.