மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் எந்தச் சவாலையும் முறியடிப்போம் - அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு
ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக எத்தகைய முடிவு எட்டப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எமக்கு உத்தரவு பிரப்பிக்க மேற்குலகு தயாராவதாலே நாம் இதனை எதிர்க்கிறோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது குறித்து கண்காணிப்புக் குழு நியமிப்பது குறித்து நாமே தீர்மானிக்க வேண்டும். வேறு நாடு எப்படி இதனை கூற முடியும். நாட்டு மக்கள் எங்களுடனே உள்ளனர். வேறு நாடொன்று தலையீடு செய்யுமளவு இங்கு அராஜகம் எதுவும் இடம்பெறவில்லை. இலங்கைத் தூதுக்குழு மீண்டும் ஜெனீவா சென்று ஏனைய நாடுகளை அறிவூட்டி வருகிறது. தூதரகங்கள் இல்லாத ஆபிரிக்க நாடுகளை அறிவூட்டவும் விசேட குழுவொன்றை அனுப்பியுள்ளோம். முஸ்லிம் நாடுகளை அறிவூட்டவும் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சில அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஜெனீவா சென்று இலங்கைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றன. யுத்த காலத்திலும் இவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். இது தவிர ஐ.நா. வில் இருந்து உத்தியோகபற்றற்ற முறையில் நால்வர் இலங்கை வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பிரதான எதிர்க் கட்சி எம்.பிக்கள் இருவர் அடங்களான எதிர்க்கட்சியினர் இலங்கை தொடர்பான தவறான செய்திகளை வழங்குவதாக அறிகிறோம். இது குறித்து நாம் எமது கவலையை தெரிவிக்கிறோம்.
பலஸ்தீனத்தில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் 40 இலட்சம் பேர் அகதிகளாகவும் உள்ளனர். எந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாத அளவில் இலங்கையில் சிறப்பாக மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் பேரே மீள்குடியேற்றப்படவேண்டி உள்ளனர். ஆனால் இலங்கை குறித்தே இந்த நாடுகள் பேசுகின்றன.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் எத்தகைய முடிவு எட்டப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவையில் ஜனாதிபதி கூறினார்.வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவி ருத்தி நடவடிக்கைகள் மீள்குடியேற்றம் என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
Post a Comment