Header Ads



செங்கன் (விசா) ஒப்பந்தம் - பிரான்ஸ் விலக நேரிடுமென சர்கோசி எச்சரிக்கை

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஐரோப்பா நாடுகளுக்கு இடையில் விசா இன்றி பயணிக்கும் செங்கன் ஒப்பந்தத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள் ளும் என அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் சார்கோசி எச்சரித்துள்ளார்.

பரிஸ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சார்கோசி இந்த எச்சரிக்கையை விடுத்தார். இதில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு தீர்வு காண்பதன் மூலமே ஐரோப்பா நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்றும் சார்கோசி இதன் போது தெரிவித்தார்.

இதன்படி ஐரோப்பிய நாடுகள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் சட்ட விரோத குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பிரான்ஸ் செங்கன் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் எனவும் அவர் கூறினார். செங்கன் ஒப்பந்தத்தின் படி ஐரோப்பாவின் 25 நாடுகளுக்கிடையில் விசா அனுமதி இன்றி பயணிக்க முடியும்.

இந்நிலையில் எதிர்வரும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சட்டவிரோத குடியேற்ற விவகாரம் பிரசார உத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக பிரான்ஸில் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் இருப்பதாக சார்கோசி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார். அத்துடன் தான் மீண்டும் ஜனாதிபதியானால், வெளிநாட்டவர் வருகையை பாதியாக குறைப்பதாகவும் உறுதி அளித்திருந் தார்.

No comments

Powered by Blogger.