எகிப்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் - இஹ்வான்களின் ஆதிக்கமும் வலுக்கிறது
எகிப்தில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவை, அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று தேர்ந்தெடுத்தது. இக்குழுவில், பழமைவாத இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக, முற்போக்கு இஸ்லாமிய எம்.பி.,க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்ட பின், கடந்தாண்டின் இறுதியில், பார்லிமென்டுக்கான தேர்தல் நடந்தது. அதையடுத்து, நேற்று புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்குழுவில், 100 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இவர்களில், 50 பேர் பார்லிமென்டில் இருந்தும், 50 பேர் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தொண்டு ஆர்வலர்கள் எனவும் நியமிக்கப்படுவர்.
பார்லிமென்டில், தற்போது இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் விடுதலை மற்றும் நீதிக் கட்சி, பெரும்பான்மை இடத்தைப் பெற்றுள்ளது. அதையடுத்து, பழமைவாத இஸ்லாமிய கட்சியான அல் நூர் உள்ளது. அரசியல் அமைப்புக் குழுவில், அல் நூர் கட்சிக்கு, 40 சதவீதம் ஆதரவு இருப்பதாக, அல் அஹ்ரம் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதையடுத்து, எகிப்திய விடுதலைக் கட்சி மற்றும் இடதுசாரியான டகம்மு கட்சி ஆகியவற்றின் எம்.பி.,க்கள், அரசியல் அமைப்புக் குழுவை, பழமைவாத இஸ்லாமியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதாகக் குற்றம் சாட்டினர். மேலும், அரசியல் அமைப்புக் குழுவுக்கான ஓட்டெடுப்பையும், மூன்று கட்சிகள் புறக்கணித்தன. இருந்தும், நேற்று அக்குழு பார்லிமென்டால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Post a Comment