Header Ads



கொழும்பு, கோட்டே ரஜமகா விகாரையில் பௌத்த பிக்குகள் இருவர் படுகொலை


கொழும்பு, கோட்டே ரஜமகா விகாரைக்குள் வைத்து இரண்டு பௌத்த பிக்குகள், வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வண.பிற்றிகல ஜினசிறி தேரர், பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.  நேற்றிரவு 9.45 மணிக்கும், 10 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை நிறக் கார் ஒன்றில் வந்தவர்களே பிக்குகளைத் தாக்கிக் கொலை செய்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பிற்றிகல ஜினசிறி தேரர், விகாரையின் குளியலறைக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குணரத்ன தேரர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமானார்.

உடனடியாக அந்தப் பகுதியில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, அருகில் இருந்த வீடு ஒன்றில் இருந்த 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். விகாரையின் பிரதமகுருவைத் தேடி வந்த குழுவினரே பிக்குகளை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, விகாரையின் பிரதமகுருவான வண. அதுல்வெவ அனுருத்த தேரர் அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு, மீள முடியாத நிலையில் உள்ளார். கொலை செய்யப்பட்ட பிக்குவின் சடலத்தை காவல்துறையினர் வெளியே கொண்டு செல்லும் போது, அங்கு பெரும் பதற்றம் உருவானது.  நேற்றுமாலை பல சந்தேகநபர்கள் விகாரைக்குள் நடமாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்தக் கொலைகளுக்கு காரணம் அரசியல் பின்னணியா அல்லது தனிப்பட்ட காரணமா என்று தெரியவரவில்லை.

No comments

Powered by Blogger.