Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை கைதுசெய்ய ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்து


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.

அத்துடன் நாட்டின் மூலச் சட்டத்தை மீறி அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினரின் பிரஜாவுரிமைகளை ரத்துச் செய்து கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கதெரிவிக்கையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 பேர் கையெழுத்திட்டு ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை கொடுக்கவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் கோரியுள்ளனர். இக் கடிதத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் இராணுவத்திற்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 47 நாடுகளுக்கு கடிதம் அனுப்பி நாட்டிற்கு எதிராக செயற்பட வலியுறுத்தியுள்ளன. சம்பந்தன் குழுவினரை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் அவர்களின் பிரஜாவுரிமைகளையும் பறிக்க வேண்டும்.  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உத்தரவாதமானது நாட்டிற்கு எதிரான செயலாகவே கருதுகின்றோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்தக்கூடாது. இதனால் நாட்டில் பெரும் சிக்கல் நிலையே ஏற்படும் எனக் கூறினார்.

இது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடியாது. நியாயமான விடயங்கள் காணப்பட்டாலும் நாட்டிற்கு ஒவ்வாத பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடிய விடயங்களே கூடுதலாக உள்ளன.

உதாரணமாக அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை தேசிய சுதந்திர முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக பல விடயங்கள் பேசப்பட வேண்டும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் தீர்க்கமான முடிவை எடுக்கும் நிலை தோன்றும் என்றார்.

No comments

Powered by Blogger.