Header Ads



பதுளை, பசறையில் சிங்கள இளைஞன் குத்திக்கொலை - முஸ்லிம், சிங்களவரிடையே பதற்றம்


பதுளை பசறையில் இடம்பெற்ற கொலையொன்றினையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பசறையைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய எச். எம். இந்திக்க உதய குமார என்ற ஆட்டோ சாரதி ஒருவர் பசறை பிரதேச சபைக்கு முன்னால் கத்தியினால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையைடுத்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதினால் பசறை நகரிலும், சுற்று வட்டாரத்திலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. கொலையாளியைக் கைது செய்யும்படி கோரி பசறை நகரில் மறியல் போராட்டத்திலும், இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கொலையாளி பசறையைவிட்டு தப்பியோடியிருப்பதாகவும் விரைவில் கொலையாளியைக் கைது செய்துவிட முடியுமென்றும், பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி. எம். ரட்ணாயக்க நம்பிக்கை தெரிவித்தார். காதல் விவகாரம் ஒன்றே, இக்கொலைக்கு காரணமென்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

யுவதியொருவரை இருவேறு இளைஞர்கள் காதல் கொண்டிருப்பதையடுத்து இரு இளைஞர்களுக்கிடையில் நீண்டகாலமாகவிருந்தே தகராறு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் சம்பந்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இக்கொலையினையடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் இப்பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருப்பதுடன், பசறை முஸ்லிம் வித்தியாலயமும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. கொலையுண்டவரின் சடலம் பசறை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்ட இக்கொலையினையடுத்து பசறை நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. நேற்று (14.03.2012) முற்பகல் இடம்பெற்ற மறியல் போராட்டத்தினால் வாகனப் போக்கு வரத்துக்குகளும் சில மணிநேர தடை ஏற்பட்டது. இதேவேளை மேற்படி கொலை தொடர்பில் இரு சந்தேக நபர்களை பசறையின் புற நகர்ப் பகுதி வீடொன்றில் மறைந்திருந்த வேளையில் பசறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இக் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் 3 சந்தேக நபர்களை தேடி பசறைப் பொலிஸார் வலை விரித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையின் போது ஆட்டோ ஒன்றில் ஐந்து பேர் துரத்தி வந்த சிலர் ஆட்டோ சாரதியான இந்திக்க உதயகுமார என்ற இளைஞனை கத்தியினால் குத்தி கொலை செய்ததாகவும் காதல் விவகாரமொன்றே, இக்கொலைக்கு காரணமென்றும் தெரிய வந்துள்ளது.

கொலையாளிகள் தப்பியோடி மறைந்திருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்தை இளைஞர்கள் குழுவினர் அறிந்து அவர்களைப் பிடித்து பசறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களை கைது செய்த பொலிஸார் இக் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்களைத் தேடி வலைவிரித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.