Header Ads



பேஸ்புக் சொந்தங்களை தேட உதவியது - உண்மைச் சம்பவம்

6 வயதில் மாயமான சிறுவன் 24 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்கள் உதவியுடன் தனது சொந்த ஊரை கண்டுபிடித்து தாயுடன் இணைந்துள்ளான். ம.பி மாநிலம் கண்ட்வா நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் ஷெரு 24 ஆண்டுகளுக்கு மாயமானான். அவனது உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன், ஒரு தங்கை. தாய் பாத்திமா. குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டு தந்தை சென்றுவிட்டதால் அண்ணன்கள் குட்டு, கல்லு ஆகியோர் அருகில் உள்ள பர்ஹான்பூர் ரயில் நிலையத்தில் டீ விற்று சம்பாதித்து வந்தனர். 6 வயது சிறுவனான ஷெரு தனது தாயிடம் அடம்பிடித்து அண்ணன்களுடன் சென்றுள்ளான். டீ விற்றுக்கொண்டிருந்த குட்டு திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான்.

ஆனால், இதுபற்றி தெரியாமல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஷெரு அந்த ரயிலில் கொல்கத்தா சென்றுவிட்டான். அங்கு மொழி தெரியாமல் தவித்த அவன், பிச்சைகார கும்பலிடம் சிக்கிக் கொண்டான். ஒருவழியாக அந்த கும்பலிடம் இருந்து தப்பிய ஷெருவுக்கு தஞ்சமளித்த மீனவர் குடும்பம், பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தது. அங்கிருந்த ஷெருவை அவுஸ்திரேலிய தம்பதி தத்தெடுத்தனர். அவனுக்கு ஷாரு ப்ராலி என்று பெயரிட்டனர். பி.பி.ஏ. படித்து முடித்து குடும்ப தொழிலான விவசாயத்தில் இளைஞனான ஷாரு ப்ராலி ஈடுபட்டார்.

ஆனாலும், தன் தாய் மற்றும் குடும்பத்தினரை பார்க்கவேண்டும் என்ற ஆசை அவரது மனதில் இருந்தது. தனது அண்ணன், தங்கை மற்றும் தாயுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது போட்டோ மட்டுமே அவர் கையில் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இண்டர்நெட் உதவியுடன் தனது சொந்த ஊரை சாரு ப்ராலி தேடினார். பர்ஹான்பூர் என்பது மறந்துபோய் பிரம்மாபூர் என்று தேடியதால் ஊரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், கூகுள், கூகுள் எர்த் இணையதளங்கள் உதவியுடன் தனது சொந்த ஊர் பர்ஹான்பூர் என்பதை கண்டுபிடித்தார்.

பின்னர், அந்த ஊர்காரர்களை பேஸ்புக் உதவியுடன் தொடர்பு கொண்டார். தனது வீடு இருந்தது கண்ட்வா என்பதை கண்டுபிடித்த ஷாரு ப்ராலி கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் இருந்து அங்கு சென்றார். அங்கு ஊரே மாறிப்போய் இருந்தது. இதற்கிடையே தாயைத்தேடி ஷாரு ப்ராலி வந்துள்ள தகவல் பக்கத்து தெருவில் வசிக்கும் பாத்திமாவுக்கு தெரிந்தது. ஓடோடி வந்த பாத்திமா தனது மகன் ஷாரு ப்ராலியை அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் கண்ணீர் மல்க சந்தித்துக் கொண்டனர். இந்தி மறந்துவிட்டதால் தாய் கொஞ்சுவது ஷாருவுக்கு புரியவில்லை. அதேபோல், ஷாரு பேசும் ஆங்கிலம் பாத்திமாவுக்கு புரியவில்லை. பின்னர், தனது அண்ணன் கல்லு, தங்கை சகிலாவை சந்தித்த ஷாரு ப்ராலி அவுஸ்திரேலியா திரும்பிவிட்டார்.

No comments

Powered by Blogger.