வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விவகாரம் - ஜெனீவாவில் ஐ.நா. அதிகாரிகளுடன் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.
வடமாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் ஜெனீவாவில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் யாழ் முஸ்லிம் இணையத்திடம் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஜெனீவாவில் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் அமைந்திருக்கும் நிலையில் அகதிகளுக்கான உயர் ஸ்த்தானிகர் காரியாலய பிரதிநிதிகளுடன் வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்டேன். வடக்கிலிருந்து புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பழைய அகதிகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதால் எழுந்துள்ள சிக்கல்கள் பற்றி ஐ.நா. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
எனது விளக்கங்களை ஐ.நா. அதிகாரிகள் செவிமடுத்தனர். வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துவதாக இதன்போது அவர்கள் உறுதியளித்தனர். இறுதி யுத்த நேரத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா. அதிகாரிகள் எனக்கு சுட்டிக்காட்டினர்.
இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மற்றும் தற்போது உருவாகியுள்ள அமைதி நிலையில் மீளக்குடியேறும் முஸ்லிம்கள் பற்றியும் சிறப்புக் கவனம் செலுத்துமாறும் ஐ.நா. உயர் அதிகாரிகளுடன் நான் வேண்டுகோள் விடுத்ததுடன், இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்களையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன் என்றார்.
அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் நீதி அமைச்சர் என்ற வகையில் இலங்கையின் பொதுவான சவால்கள், எனது அமைச்சுடன் தொடர்புடைய விவகாரங்கள் பற்றியும் கலந்துரையாடினேன். குறிப்பாக ஆட்கடத்தல் மற்றும் அதனை தடுத்தல் போன்ற விடயங்கள் பற்றியும் இதன்போது தான் ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
Post a Comment