ஜெனீவாவில் அமைச்சர் ரிஷாட் அகதிகளுக்கான ஐக்கியநாட்டு உயர்ஸ்தானிகர் சந்திப்பு (படம்)
அமைச்சர் ரிஷாத்தின் ஊடகப் பிரிவு
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அகதிகளுக்கான ஐக்கியநாட்டு உயர்ஸ்தானிகர் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களை அண்மையில் ஜெனீவாவில் சந்தித்து இலங்கையில் நீண்டகாலமாக மீள்குடியேற்றப்படாதிருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச்சென்று மீள்குடியேறுவதற்கு தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளபோதிலும் அவர்கள் முறையாகவும், பயனளிக்கத்தக்க முறையிலும் மீள்குடியேற்றப்படவில்லை என்ற கருத்தை அமைச்சர் தெரிவித்தார். வாழ்வதற்கான வீடு, குடிநீர், சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபடியால் அவர்களது மீள்குடியேற்றம் பயனளிக்ககூடிய முறையில் அமையவில்லை என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன் உதவிவழங்கும் முகவர் அமைப்புகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டமனிதாபிமான நடவடிக்கையின் விளைவாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உதவிகளை நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்கும் சமத்துவமாக வழங்குவததற்கு தவறிவிட்டதெனவும் எடுத்துக்கூறினார்.
நீண்டகாலமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறுவதற்கு கஷ்டப்படும் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பாக அமைச்சர் மகஜர் ஒன்றையும் கையளித்தார். அந்த மகஜரில் மீள்குடியேறவிருக்கும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
'இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் விளைவாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் கொழும்பிலுள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் வழங்கிய பெறுமதிமிக்க உதவிகளுக்கு எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மீள்குடியேற்றுவதில் அக்காலப்பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சராக நான் பதவிவகித்தமையினால் மீள்குடியேற்றத்தில் சகல உதவிவழங்கும் நிறுவனங்களினதும் பங்களிப்பை நான் நன்றாக அறிவேன.;
நீண்டகாலமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறவிருப்பவர்கள் தொடர்பான ஒரு பிரச்சனையை தங்களின் மேலாக கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். வடமாகாணத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களை 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 48 மணித்தியாள காலஅவகாசம் கொடுத்து பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டமையை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 60000 ஆகும். இவ்வாறு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இலங்கையின் தென்பகுதியில் பிரதானதமாக புத்தளம் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் தற்காலிகமாக தங்குமிடவசதிகள் அளிக்கப்பட்டது. இந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் நீண்டகாலமாக நலன்புரி நிலையங்களில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வந்துள்ளார்கள் ஒரு சிலர் மட்டும் தாங்கள் வசித்த இடங்களில் வாழும் சமூகத்தினருடன் இணைந்து அரசாங்க அல்லது உதவி வழங்கும் முகவர்களின் உதவிகளை பெற்றோ அல்லது பெறாமலோ நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்வதற்கு தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளார்கள். இன்றுவரை 80000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட சுமார் 20000 குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களில் இருந்து பதிவுகளை ரத்துச்செய்து தாங்கள் முன்புவாழ்ந்துவந்த இடங்களுக்கு சென்று பதிவினை மேற்கொண்டுள்ளார்கள். ஆனாலும் அவர்கள் மீளக்குடியேறி வாழ்வதற்கான அடிப்படைவசதிகளான வீடு, குடிநீர், மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபடியினால் அவர்களது மீள்குடியேற்றம் முறையாகவும் பயனளிக்கத்தக்கதாகவும் அமையவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு மீளக்குடியேறுவதற்கு உதவிவழங்கும் முகவர்களினால் வழங்கப்படும் உதவிகள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சமமாக வழங்கப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கை அரசாங்கம் காலம், இடம், மற்றும் இனவேறுபாடின்றி சகல இடம்பெயர்ந்த மக்களும் ஒரேமாதிரியாக கணிக்கப்படவேண்டுமென ஆணித்தரமாக கூறியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை புதிய இடம்பெயர்ந்த மக்கள், பழைய இடம்பெயர்ந்த மக்கள் என இரு வகுதிகளாக 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இடம்பெயர்ந்தவர்களை புதிய இடம்பெயர்ந்தவர்களாகவும் அதற்கு முன்பு இடம்பெயர்ந்தவர்களை பழைய இடம்பெயர்ந்துள்ளவர்களாகவும் வகுத்துள்ளமை சில பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக யு.என்.எச்.சி.ஆர் வீட்டு நிர்மாணிப்புக்காக வழங்கும் உதவித்தொகையான ரூபா.25000 பழைய இடம்பெயர்ந்த மக்களுக்குகிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன்.
வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வந்தபொழுது புத்தளத்தில் அவர்கள் அன்பாகவும், ஆதரவாகவும் வரவேற்கப்பட்டார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்தும் புத்தளத்தில் வாழ்வது அப்பிரதேசத்தில் வளங்களை பிரித்தெடுப்பதாக புத்தளத்தில் நிரந்தரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்கள் கருதுகிறார்கள். இதன்விளைவாக இந்த இருபிரிவினருக்குமிடையே பிரச்சனைகளும், கொந்தளிப்புகளும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
எனவே பழைய இடம்பெயர்ந்த மக்களையும் ஒரே பிரிவுகளாக கருதி அவர்களுக்கும் சகல உதவிகளையும் சமமாக வழங்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும். இதற்கு யு.என்.எச்.சி.ஆர் முன்மாதிரியாக செயற்பட்டு வழிகாட்டுவார்களாயின் ஏனைய உதவிவழங்கும் முகவர் அமைப்புகள் இதனை பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. எனவே கொழும்பிலுள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்திற்கு புதிய இடம்பெயர்ந்தவர்கள், பழைய இடம்பெயர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டாது எல்லோரையும் ஒரே பிரிவுகளாக கருதி உதவிகளை வழங்குமாறு தாங்கள் பணிப்பீர்களாயின் மீள்குடியேற்றத்திற்கு பெறும் பங்களிப்பை செய்ததாக கருதமுடியும்.
It's a very good initiative. Insha Allah We may hope that it will bear fruits.
ReplyDeleteMuhajireen Colombo