Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா..?

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ள செயற்றிட்டங்கள் வகுக்கப்படுவதாக அண்மையில் யாழ் முஸ்லிம் இணையத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இச்செய்தியை சில தமிழ் ஊடகங்கள் தவறான நோக்குடன் அர்த்தப்படுத்தியிருந்தன. இந்நிலையில் தற்போது இந்து – பௌத்த சங்கம் என்ற அமைப்பு, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு,

யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரி உள்ளது சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கம். இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் விடுத்து உள்ள அறிக்கை வருமாறு,

இலங்கையில் கட்டாய மத மாற்ற நடவடிக்கை சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டாய மத மாற்ற நடவடிக்கை தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.

ஆனால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் காலம் காலமாக கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று சமயத்தவர்களை குறிப்பாக, இந்துக்கள், பௌத்தர்கள் ஆகியோரை சலுகைகளையும், உதவுகளையும் வழங்கி மத மாற்றம் செய்து விடுவது தொடர்கதையாகவே இடம்பெற்று வருகின்றது. இதை இந்து – பௌத்த சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்து இஸ்லாமிய சக்திகளால் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத் தளத்தில் இது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று பிரசுரமானது. தற்போது அச்செய்தி தளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

நாம் முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் இம்மதத்தவர்களின் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை எம்மால் அனுமதிக்க முடியாது.  முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் அவர்களின் மார்க்கத்தின்படி ஒழுகுகின்றமையை நாம் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது சமயப் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றமையை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏனைய சமயத்தவர்களுக்கு விளக்குகின்றமை நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற செயல் என்று இஸ்லாமியர்கள் நியாயம் கற்பிக்கக் கூடும். ஆனால் ஏனைய சமயத்தவர்களின் மத நிகழ்ச்சிகளில் இதே முஸ்லிம்கள் பங்குபற்றுவார்களா? ஏனெனில் ஏனைய மதத்தவர்களின் சமய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றமை முஸ்லிம்களால் பாபத்துக்கு உரிய செயலாகவே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியேற்றம், புனட்வாழ்வு, அபிவிருத்தி, கலாசார வளர்ச்சி, மறுமலர்ச்சி ஆகியன சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கட்டும். மாற்று மதத்தவர்களை இலக்கு வைக்கின்ற செயல்பாடுகளில் இறங்க வேண்டாம். இவ்வாறான கட்டாய மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்ற பட்சத்தில் எமது அமைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுத்தே தீரும்.

யாழ் முஸ்லிம் இணையத்தின் விளக்கம்

புனித இஸ்லாமிய மார்க்கமானது கட்டாய மதமாற்றத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றிலும் அல்லது யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றிலும்கூட முஸ்லிம்கள் எவரும், முஸ்லிம் அல்லாதவர்களை பலாத்கார இல்லையேல் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தியதில்லை.

எந்த மதத்தினரையும் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தவேண்டிய தேவையும் இஸ்லாத்திற்கோ அல்லது முஸ்லிம்களுக்கு இல்லை.

இலங்கையிலும், உலகிலும் எவர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம். உலகின் எந்தப்பகுதியிலாவது முஸ்லிம்கள் ஒரு கிறிஸ்தவரையோ, பௌத்தரையோ, இந்துவையோ கட்டாய மதமாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளதற்கான எந்த ஆதாரத்தையும் எவராலும் காட்டிவிடமுடீயாது. இஸ்லாத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் சில கயவர்கள் இஸ்லாம் வாள் மூலம் பரப்புரை செய்யப்பட்டதென பச்சைப்பொய் சொல்கின்றனரே தவிர இதுவரை தமது ஆதாரத்தை முன்வைக்கவில்லை.

ஒருவரை மதமாற்றம் செய்வதற்கும், தனது மதம் குறித்து மாற்றுமத சகோதரர்க்கு எடுத்துக்கூறுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இஸ்லாம் பற்றி உலகளவில் எடுத்துக்கூறும் பிரச்சாரம் உலகின் எல்லாப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்துக்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டிலும்கூட இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு யாரும் கட்டாய மதமாற்றம் என அர்த்தம் கற்பிக்கவில்லை.

எனவே உண்மை நிலவரத்தையும், யதார்த்தத்தையும் அறிந்துகொள்ளுமாறு தவறான அர்த்தம் கற்பிக்கும் சகோதரர்களுக்கும், ஊடகங்களுக்கும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எமது முன்னைய செய்தி நீக்கப்பட்டமையை சிலர் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லும் செய்தி என்னவென்றால் ஒரு செய்தியை வைத்துக்கொண்டு அதுவிடயத்தில் தவறான அர்த்தம் கற்பிக்க சிலர் முயன்றனர். அந்த தவறான அர்த்தம் கற்பித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன்தான் நாம் அவ்வாறு செயற்பட்டோம். எமக்கு செய்தியைவிட எமது சமூகம் பிரதானமானது. தவறான அர்த்தப்படுத்தல்கள் 100 சதவீத சுயநலன்களுக்கானது என்பதையும், சுய விளம்பரத்திற்கானது என்பதையும் நாம் புரிந்தும் கொண்டுள்ளோம்.

இந்நிலையில் கட்டாய மதமாற்றம் என்பது முஸ்லிம்களுக்கோ அல்லது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கோ அவசியமற்றதொன்று. அதில் நம்பிக்கையும் எமக்கு கிடையாது என்பதையும் உறுதியாக தெரிவிக்கிறோம். உலக முஸ்லிம்கள் தமது வேதமறையாக கொள்ளும் புனித அல்குர்ஆனில் முஸ்லிம்கள்  +  முஸ்லிம் அல்லாதவர்கள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஸூரத்துல் காபிரூன் (காபிர்கள்)  மக்கீ, வசனங்கள் - 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

109:1    قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2   لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4   وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6   لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

மேற்சொன்ன அல்குர்ஆன் நிலைப்பாடே சகல முஸ்லிம்களினதும் நிலைப்பாடாகும். எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களாயினும், அல்லது ஏனையப் பிரதேச முஸ்லிம்களாயினும் சரி, அவர்களுக்கு எவரையும் கட்டாய மதமாற்றும் அவசியமோ அல்லது அவசரமோ கிடையாதென்பதை இங்கு உறுதியாக தெரிவிக்கிறோம்.

யாழ் முஸ்லிம் இணையம்

3 comments:

  1. செய்திகளை பதிவு செய்யும்போது ஒவ்வொரு சொல்லிலும் , வசனத்திலும் அவதானம் தேவை நாம் பதிவு செய்யும் செய்திகளே தேவயற்ற பிரச்சினைகளை கொண்டுவர காரணமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்- யாழ் ரஹீம்

    ReplyDelete
  2. வஹாப்

    யாழ் முஸ்லிம் எடிட்டருக்கு...!
    உங்கள் பணிதொடர எமது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்.
    மாற்றுமத சகோதரர்கள் விடயத்தில் நிதானமானதும், தெளிவானதுமான போக்கை கடைபிடித்திருக்கிறீர்கள்..!!

    ReplyDelete
  3. இப்போது தமிழ் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்றன. தமிழ் அமைப்புக்கள் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டில் உள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் உரிமைக் குரலான 'யாழ் முஸ்லிம் இணையம்' முழு முஸ்லிம் சமூகத்திற்கும் நல்ல பல செய்திகளை சொல்லி வருகிறது.

    யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே பல தமிழர்கள் இஸ்லாத்திற்கு வந்துள்ளனர். அவர்களை யாரும் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தவில்லை. அவர்கள் விரும்பிய இஸ்லாத்திற்கு வந்தனர் என்பதை தமிழ் - பௌத்த சங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

    யாழ். மரைக்கார் - யாழ்ப்பாணம்

    ReplyDelete

Powered by Blogger.