Header Ads



யாழ் முஸ்லிம்கள் தமது காணிகளை விற்பதை நிறுத்தி, நில உரிமையை பாதுகாக்க வேண்டும் - கவிஞர் ஜெயபாலன் வலியுறுத்து

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது காணிகளை மாற்று மதத்தினருக்கு விற்பதை உடனடியாக நிறுத்தி, பாரம்பரிய காலமாக தாம் வாழ்ந்துவரும் நில உரிமையை உறுதிசெய்துகொள்ள வேண்டுமென பிரபல கவிஞர் ஜெயபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் முஸ்லிம் இணையத்திற்கு இன்று வியாழக்கிழமை இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலமாக கருத்து வெளியிடுகையிலேயே கவிஞர் ஜெயபாலன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இதுதொடர்பில் கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவு பிரதானமானது. இரண்டு சமூகங்களும் உரிமைபெற்று வாழ்வது முக்கியமானது. எதிர்காலம் இருசமூகங்களுக்கும் சிறந்ததாக அமையவேண்டுமாயின் ஒற்றுமை அவசியமாகிறது.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய காணிகளை யாழ்ப்பாண தமிழருக்கு விற்றுவருவது அதிகரித்துவருவது துரதிஷ்டவசமானது. முஸ்லிம்களின் காணிகள் என்றும் முஸ்லிம்களின் உடமையாக இருப்பதே சிறந்தது.

1990 அக்டோபரில் யாழ்ப்பாண முஸ்லிம்களை பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தினார்களோ அந்நிலை மீண்டும் ஏற்படவேண்டும். அவர்களுடைய கடைத்தெருக்கள், வளவுகள், வீடுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட சகலவற்றையும் சம்பந்தப்பட்ட முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது அவசியமாகிறது. இவற்றை ஆளவும், நுகரவும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பூரண உரிமையுடையவர்கள். தமது வாழ்விடங்களையும், சொத்துக்களையம் பல நூற்றாண்டுகள் அனுபவித்த யாழ் முஸ்லிம்கள் அவற்றை மீண்டும் தம்வசப்படுத்தும் உரிமையை தமிழர்கள் ஏற்றாக வேண்டும்.

இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது காணிகளை வளவுகளை எக்காரணம் கொண்டும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்யக்ககூடாதென்பது எனது விருப்பமாகும். முஸ்லிம்கள் இவ்வாறு தொடர்ச்சியாக தமது காணிகளை தமிழருக்கு விற்பனை செய்வார்களாயின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அற்றுப்போய்விடும். இன்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் பல குடும்பங்களாக பெருகியுள்ள நிலையில் தமது மூதாதையர் வாழந்த காணிகளை பாதுகாக்கவேண்டிய தேவை முற்றிலும் யாழ் முஸ்லிம்களை சார்ந்துள்ளது. இதனைவிடுத்து அவர்கள் தமது காணிகளை விற்க முயலுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அவ்வாறே முஸ்லிம்களிடம் இருந்து காணிகளை வாங்கிய தமிழர்கள் முஸ்லிம்களிடம் அந்தக் காணிகளை மீண்டும் நியாயமான முறையில் ஒப்படைத்துவிடுமாறு நான் வலியுறுத்துகிறேன். இது யாழ்ப்பாண தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது காணிகளை விற்பதை உடனடியாக நிறுத்துவதற்கான செயற்றிட்டங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் ஈடுபடவேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியமாகிறது.

தற்போது இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஏற்பட்டுள்ள சாதக வாய்ப்புக்களை யாழ்ப்பாண முஸ்லிம்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்வதே அவர்களின் எதிர்காலத்திற்கும், யாழ்ப்பாணத்தில் அவர்களின் தொடர் இருப்புக்கும் துணையாக அமையும். குறிப்பாக தமது நில உரிமையை பாதுகாக்க முன்வரவேண்டும். இதுவிடயத்தில் தூரநோக்குடன் அமைந்த (மாஸ்டர் பிளேன்) திட்டங்கள் உதவும் எனவும் கவிஞர் ஜெயபாலன் யாழ் முஸ்லிம் இணையத்துடனான இந்த தொலைபேசி உரையாடலின்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பு - யாழ் முஸ்லிம்கள் 1990 இல் பலாத்காரமாக புலிகளின் வெளியேற்றத்திற்கு உட்டபட்டது முதல் கவிஞர் ஜெயபாலன் யாழ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர். யாழ் முஸ்லிம்களின் அவலங்களை கவிதையாக வடித்தவர். தற்போது தென் இந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ஆடுகளம் படத்திற்கு இந்தியாவின் தேசிய விருதும் கிடைத்தது. யாழ் முஸ்லிம் இணைய வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ள கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ஜெயபாலனே அற்புதமான முன்னுரையை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிட்டத்தக்கது.

2 comments:

  1. உங்கள் அறிவுரைக்கு நன்றிகள் கவிஞரே.

    உங்கள் நல்ல மனதைப் பாராட்டுகின்றோம்.

    ReplyDelete
  2. ippadiyana nallamanitharin mukavariyai tharuveerkala

    ReplyDelete

Powered by Blogger.