Header Ads



சிறுமிகளுக்கு ஆபத்தாகும் யாழ்ப்பாணம் - சட்டத்தின் ஓட்டையும் காரணம்


வடக்கில் ஏழு வயதுச் சிறுமிகள் கூட பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இங்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த இரு மாதங்களில் 32 சிறுவர் பாலியல் முறைகேடுகளும் ஏனைய பாலியல் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் சுகாதரத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

"இவ்வாறு பதியப்பட்ட 32 சம்பவங்களில் 09 சம்பவங்கள் மிக மோசமான, மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதைச் சம்பவங்களாக இனங்காணப்பட்டுள்ளன" என யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியான, வைத்திய கலாநிதி எஸ். சிவரூபன் [Judicial Medical Officer - JMO] தெரிவித்துள்ளார். 

"2010ல் யாழ்குடாநாட்டில் 102 பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பதியப்பட்டுள்ளன. ஆனால் 2011 இல் இந்த எண்ணிக்கை 182 ஆக உயர்வடைந்துள்ளது" என  வைத்திய கலாநிதி சிவரூபன் தெரிவித்துள்ளார். 

பதின்ம வயதை அடையாத இரு சிறுமிகள் மீது பாலியல் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ  சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"யாழ்ப்பாணத்தில் 7-8 வயதை அடைந்த இரு சிறுமிகள் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுதுத்தப்பட்டுள்ளனர். உண்மையில் இச்சிறுமிகள் பூப்பெய்துவதற்கு முன்னர் இவ்வாறான பாலியல் முறைகேட்டுக்கு உள்ளானது அவர்களுக்கு மிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாகும்" எனவும் வைத்திய கலாநிதி சிவரூபன் தெரிவித்துள்ளார். 

"நெடுந்தீவுப் பிரதேசத்தில் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 12 வயதுச் சிறுமி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வைத்தியர்கள் ஒன்றரை மணித்தியால சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

"பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் சித்திரவதைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஆனால் இவ்வாறான முறைகேடுகளிலிருந்து இவர்களைக் காப்பாற்றி யதழ் குடாநாட்டில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கேற்ற எந்தவொரு பொறிமுறையும் காணப்படவில்லை" எனவும் வைத்திய கலாநிதி சிவரூபன் மேலும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான பாலியல் முறைகேடுகள் தொடர்பாக பெற்றோர்கள், காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்வதில் தயக்கம் காட்டுவதால்  பதிவுக்கு கொண்டு வரப்படாத பாலியல் சித்திரவதைகளும் காணப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது நடைமுறையிலுள்ள சிறுவர் மீதான சித்திரவதைகள் தொடர்பான சட்டமானது மீளப் பரிசீலிக்கப்பட்டு, இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் சிறுவர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.