ஒஸ்மானியா கல்லூரியில் A/L பிரிவை ஆரம்பித்தல் - காலத்தின் தேவை
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் தற்போது 450 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் க.பொ.த. உயர்தரப் பிரிவுகளை ஆரம்பிக்கவேணடிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஒஸ்மானியா கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பிரிவு இல்லாமை காரணமாக க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் வேறு பாடசாலைகளை நாடிச்செல்ல வேண்டியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் இவ்வாறு வேறு பாடசாலைகளுக்கு செல்வது அவர்களுடையதும், அவர்களுடைய பெற்றோர்களினதும் விருப்பமாக இருந்த போதிலும் க.பொ.த. உயர்தரத்தை ஒஸ்மானியா கல்லூரியிலேயே தொடர்ந்து கற்கவிரும்பும் மாணவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவைப்பாடு உள்ளதையும் நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நேற்று திங்கட்கிழமை வெளியாகிய ஓ.எல். பரீட்சையிலும் ஒஸ்மானியா கல்லூரியிலிருந்து ஏ.எல். கற்பதற்கு 6 பேர் தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் ஒருவரைத்தவிர ஏனைய 5 மாணவர்கள் ஒஸ்மானியாவில் ஏ.எல். கல்வியைத்தொடர விருப்பம் கொண்டுள்ளனர். எனினும் தற்போதுவரை அங்கு ஏ.எல். பிரிவு இல்லை. இந்நிலையிலேயே ஒஸ்மானியாவில் ஏ.எல்.பிரிவை ஆரம்பிக்கவேண்டிய தேவை உள்ளது.
ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் இதுதொடர்பில் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில், ஒஸ்மானியா கல்லூரியில் தற்போது ஏ.எல். பிரிவை ஆரம்பிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேறு பிரதேசங்களில் தற்போது வாழந்துவரும் முஸ்லிம்களில் சிலரும் தற்போது ஒஸ்மானியாவில் ஏ.எல். பிரிவு ஆரம்பிக்குமிடத்து தமது பிள்ளைகளை சேர்ப்பிக்க வாக்குறுதி வழங்கியுள்ளனர். என்றார்.
அத்துடன் ஒஸ்மானியா கல்லூரி எந்தப் பின்னடைவுகளுமின்றி தற்போது முன்னேறி வருவதாகவும், இதற்கு சகலருடைய ஒத்துழைப்புகளும் அவசியமெனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை ஒஸ்மானியா கல்லூரியில் ஏ.எல். பிரிவை ஆரம்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எமது யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகள் தம்மாலியன்ற பங்களிப்புகளை செய்ய முன்வர வேண்டுமென யாழ் முஸ்லிம் இணையம் அழைப்பு விடுக்கிறது.
Post a Comment