மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்போம் - 40 இலட்சம் மாணவர்கள் உறுமிமொழி எடுத்தனர்
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தம்மை அர்ப்பணிப்பதாக 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் நேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதன் உத்தியோகப்பூர்வ தேசிய நிகழ்வு கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கலந்து கொண்டு அமைச்சர்கள் முன்னிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தம்மை அர்ப்பணிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்து பாடசாலைகளையும் சேர்ந்த 40 இலட்சம் மாணவர்களும் நேற்றுக் காலை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தமது பாடசாலை அதிபர் முன்னிலையில் இதற்கான உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.
நாளைக்காக இன்று எனும் தொனிப் பொருளிலேயே மின்சக்தியை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்று முதல் பாடசாலை மாணவர்களிடையே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு வாரந்தோறும் திங் கட்கிழமையன்று காலை வேளை கூட் டத்தை தொடர்ந்து இதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்பதற்கான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ நிகழ்வில் அமைச்சர் ரணவக்க உரையாற்றுகையில் கூறியதாவது, இன்றைய உலகை ஆளப்போவது எமது நாளைய இளைஞர்களே. இவர்களின் நன்மைக்காகவே ‘நாளைக்காக இன்று’ தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
ஒரு மனிதனின் 80 சதவீதமான தேவை மின்சக்தி மற்றும் எரிசக்தியை அடிப்படை யாகக் கொண்டே அமைந்துள்ளது. எதிர் வரும் ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களின் உற்பத்தி வெகு தொலை விற்கு செல்ல இடமுண்டு. தற்போது உலகில் 1200 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாளாந்தம் 90 மில்லியன் பீப்பாய் எண்ணெய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இதன்படிபார்க்கையில் இன்னும் 30 ஆண்டுகளில் உலகில் எண்ணெய் தீர்ந்து போவதற்கான வாய்ப்புகளுண்டு. அப்போது எமது சந்ததியினர் மின்சார மில்லாத உலகிற்குள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமன்றி எண்ணெய் மற்றும் அனல் ஆகியவற்றை எரிப்பதன் மூலம் எமது சூழல் மாசடைகிறது. இதற்காக நாளைக்காக இன்று முதலே நாம் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணிவரையேனும் மின்சக்தியை சிக்கனமாக பாவிக்க வேண்டும். இது பெற்றோர் தமது பரம்பரைக்காக செய்யும் ஒரு சேமிப்புத் திட்டமெனவும் அவர் கூறினார்.
Post a Comment