Header Ads



புலிகள் 30 வருடங்களாக மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து சர்வதேசம் மௌனம் காக்கிறது - மஹிந்த குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எதிர்க்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து சில நாடுகள் மௌனம் காத்து வந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பாரியளவிலான படுகொலைகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்தின் மீது சில நாடுகள் தற்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புக்கள் இடம்பெறாத சந்தர்ப்பத்திலேயே சில நாடுகள் மனித உரிமை மீறல் குறித்து குரல்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல இனங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் உயிர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பலம்பொருந்திய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்கள் தொடர்பில் உலக சமூகம் எதிர்ப்பை வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.