வடமாகாண மாணவர் சத்துணவு திட்டம் - 180 மில்லியன் ரூபா உதவிகளை வழங்குகிறது ஜப்பான்
வடபிராந்திய பாடசாலைகளில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் சத்துணவுத் திட்டத்துக்கு 180 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. வடபகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட சிறுவர்களின் போசாக்கு நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை காணப்படுவதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்களின் போசாக்கு நிலைமை உயர்ந்த மட்டத்தில் இல்லாவிட்டால் அவர்களின் செயற்பாடுகளில் திறமை காணப்படாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜப்பானின் நிதியுதவியுடன் வடபகுதி பாடசாலை மாணவர்களிடையே முன்னெடுக்கப்படவிருக்கும் சத்துணவுத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகக் கண்காணிக்கப்படும் என்றும் கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக ஐப்பானின் பூமியதிர்ச்சி ஏற்படும் பகுதிகளில் வழங்கப்படும் தகரங்களில் அடைக்கப்பட்ட மீன்கள் வழங்கப்படவிருப்பதாகவும், ஜப்பான் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில பொருட்கள் இத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது
Post a Comment