Header Ads



பாகிஸ்தானிடம் 110 அணு ஆயுத குண்டுகள்

பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணுஆயுதங்கள் வரை உள்ளதாக அணுஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச இயக்கம் “குண்டுகளில் சேமிக்காதீர்” என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணுஆயுதங்கள் வரை உள்ளது. பாகிஸ்தான் ஆயுத சேமிப்பு கிடங்கில் இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு அந்நாட்டிடம் 60 முதல் 80 அணுஆயுதங்கள் வரையே இருந்தன. தற்போது அவை 90 முதல் 110 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தன்னிடமுள்ள அணுஆயுதங்களை 350 ஆக உயர்த்தும் நோக்கில் பாகிஸ்தான் வேகமாக செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதற்காக கடந்தாண்டு 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் செலவிட்டுள்ளதாகவும், கடந்த 2010ம் ஆண்டு இந்த தொகை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அணுஆயுத உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதையடுத்து, அதற்காக பாகிஸ்தான் செலவிடும் தொகையும் அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., மறுப்பு: இதற்கிடையே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் பசித் கூறுகையில், இந்த அறிக்கை மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு திட்டங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவத்தில் அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், பாகிஸ்தானின் முக்கிய குறிக்கோள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், நாட்டு மக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், ஒருக்காலும் ஆயுதப்போட்டியை பாகிஸ்தான் ஊக்குவிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.