Header Ads



பிள்ளைகள் கணனிகளின் அடிமைகளாக மாற இடமளிக்காதீர் - மஹிந்த அறிவுரை


தாய்மொழியை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் நாட்டைச் சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை காலியில் தெரிவித்தார். தாய்மொழியை உரிய முறையில் பயன் படுத்தியவர்கள்தான் உலகிற்கு சிறந்த படைப்புகளையும், புத்தாக்கங்களையும் வழங்கியுள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தேசிய கல்வி நிறுவகம் அண்மையில் ஆறாம் வகுப்பு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வொன்றில் 18 சதவீதமான சிங்கள மொழி மாணவர்கள் தாய்மொழியை சரியான முறையில் எழுத முடியாதிருப்பது தெரிய வந்துள்ளது. இதே பிரச்சினை தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் மத்தியிலும் உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

காலி மஹிந்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில்,

எமது எதிர்கால சந்ததியினர் புத்தகப் பூச்சிகளாகவும், கணனிகளின் அடிமைகளாகவும் மாறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. மாறாக எமது பிள்ளைகளை கலை, கலாசார நடவடிக்கைகளிலும், விளையாட்டுத் துறையிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் நாட்டைப் பொறுப்பெடுக்கவிருக்கும் எதிர்கால சந்ததியினர்.  அவர்களது சேவையை நாடு எதிர்பார்த்து இருக்கின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே அவர்களை நற்பிரஜைகளாகக் கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாததாகும்’ என்றார்.

No comments

Powered by Blogger.