Header Ads



பாராளுமன்றத்தை அரசாங்கம் சீனாவுக்கு விற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை



நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவரும் அரசு இந்த   நாடாளுமன்றத்தைக்கூட சீனாவுக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இவ்வாறு ஐ.தே. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஸா டி. சில்வா நாடாளுமன்றில் தெரிவித்தார். வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:


நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொருளாதாரத்தைச் சீரழித்து விட்டது. 1980 முதல் 81 வரை தனிநபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் அபிவிருத்தி கணிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது இந்த நிலை மாறி பெறுமதிமிக்க வாகனங்களின் இறக்குமதியின் அடிப்படையிலேயே நாட்டின் அபிவிருத்தி கணிப்பிடப்படுகின்றது. 

இதுபிழை. மஹிந்த சிந்தனை மூலம் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என அரசு கூறுகின்றது. ஆனால் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முறையே 07 மற்றும் 7.5 கோடி லீற்றர் மதுபானம் நாட்டில் அருந்தப்பட்டுள்ளது.

அத்துடன் 2009 இல் 410 கோடி சிகரட்டுகளும் 2010 இல் 430 கோடி சிகரெட்டுகளும் புகைக்கப்பட்டுள்ளன. இதுதான் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டமா?. நாட்டின் அபிவிருத்திக்கு முதலீடுகள் தேவை. ஆனால், அதற்கு அரசிடம் நிதியில்லை. அதனால்தான் நலன்புரி மற்றும் சமுர்த்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன.

சமுர்த்தி வேலைத்திட்டத்திற்கு 2011 இல் 1100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால், 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் 990 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பதை முதலீடு செய்தல் என்று கூறமுடியாது. முதலீடு என்ற போர்வையில் நாடாளுமன்றத்தையும் இந்த அரசு சீனாவுக்கு விற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அரசு கடன்பாட்டே முதலீடு செய்கின்றது. இது ஒரு போதும் நாட்டை அபிவிருத்தி செய்ய உதவாது. இது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும். என்றார்.         

No comments

Powered by Blogger.