Header Ads



ஜவாஹிருல்லா (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்) கவனத்திற்கு..!


ஜவாஹிருல்லா 

உச்சிதனை முகர்ந்தால் எனும் தமிழர் சார்பு புகைப்படத்தை பார்ப்பதற்காக நீங்கள் 30 வருடங்களின் பின்னர் திரையரங்கு சென்றிருந்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்..! அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நீங்கள் தெரிவித்த கருத்துக்களையும் வாசித்தேன். சகோதர தமிழ் மக்கள் குறித்து கருத்துக்களை வெளியிட உங்களுக்கு உள்ள உரிமையை உறுதிசெய்தவனாக சில கருத்துக்களை இங்கு பதிவிட முயலுகிறேன்.

1983 இல் இலங்கை தமிழருக்கு எதிரான வன்முறையை அறிந்து இந்தியாவில் முதல் தீக்குளிப்புச் சம்பவத்தை செய்தது ஒரு முஸ்லிம் சகோதரர் என்று கம்வாரிதி ஜெயராஜ் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். தென் இந்தியாவில் வாழும் உங்களைப்போன்ற முஸ்லிம் தலைவர்கள் பலருக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தைவிட தமிழ் சமூகம் மீது பற்று அதிகம்தான். இந்நிலையில்தான் அங்குள்ள மக்களில் சிலர் உள்ளனரோ என்று சிந்திக்கத்தோன்றுகிறது. 

இலங்கையின் வடக்குகிழக்கு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தமிழர்கள் மேற்கொண்ட கொடூரங்கள் பெரியது. நல்லூரிலிருந்து முஸ்லிம்களின் ஜும்ஆ பள்ளிவாசலை அபகரித்து, மற்றுமொரு ஜும்ஆ பள்ளியை கிறிஸ்தவ தேவாலயமாக்கி, முஸ்லிம்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது உள்ளிட்ட பல கொடூரங்களை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டுள்ளது.

பிந்திய தமிழர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத அமைப்புக்கள் வடக்குகிழக்கு முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அக்கிரமங்களின் பட்டியல் மிக நீளமானது. கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணித்தாயின் கருவரையில் அடைக்கலமாகியிருந்த குழந்தைகூட பிரபாகரன் தலைமைதாங்கிய புலிகளின் கொலைவெறிக்கு தப்பவில்லை.

வடக்குப் பகுதியிலிருந்த முஸ்லிம்கள் புனித கலிமாவைச் சொன்ன ஒரே காரணத்திற்காக புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். இவர்களில் இன்றும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அகதிகளாக உள்ளனர்.

தமிழர் தரப்பும், ஆயுதமேந்திய இயக்கங்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அக்கிரங்களை நான் மிகச்சுருக்கமாகவே உங்களுக்கு கூறியுள்ளேன். இந்த அக்கிரமங்கள் எல்லாம் உங்களைப் போன்ற தென் இந்திய முஸ்லிம் தலைவர்கள் இதுகாலவரையும் அறியாமலிருப்பது  மகாவேடிக்கை. 

சகோதர தமிழ் சமூகத்தின் துன்பங்கள் குறித்து பேசுவதற்கு முன்னர் தயவுசெய்து எங்கள் துயரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் உள்ள சோகச் சம்பவங்களைவிட எங்கள் கதை கொடியது. அதைவிடக் கொடியது தமிழர் தரப்பும், தமிழ் ஆயுத இயக்கங்களும் எங்கள் மீது மேற்கொண்ட வன்முறை

எதிர்வரும் காலங்களிலாவது உங்களைப் போன்ற தமிழ்நாட்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து இலங்கையின் வடக்குகிழக்கு முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து அறிந்துகொள்ள முயலுங்கள்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் குறித்து ஜவாஹிருல்லா 

உச்சிதனை முகர்ந்தால் தமிழகத்தில் வாழும் மனிதநேயமுள்ள அனைவரின் மனசாட்சி- ஜவாஹிருல்லா (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்) திரையரங்கிற்குச் சென்று நான் படம் பார்த்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. இச்சூழலில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் பார்க்க முன்காட்சி திரையரங்கம் வருமாறு சகோதரர் இயக்குனர் புகழேந்தி அழைத்தப் போது என்னால் மறுக்க முடியவில்லை.திரைப்படம் முழுவதும் என் கண்கள் பனித்துக் கொண்டே இருந்தன. ஈழத்தில் நம் தமிழ் சொந்தங்கள் சிங்கள பேரினவாதத்தின் வல்லாதிக்கத்தால் படும் துயரத்தின் ஒரு பகுதியை மிக தத்துருபமாக இப்படம் நம் கண் முன்னே நிறுத்தியது.

சிங்கள பயங்கரவாதிகளின் ஈரமில்லாத கொடுங்கோன்மைக்கு தமிழ் சொந்தங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலும் அதிலும் மிகப் பெரும் துயரங்களை சுமந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களில் ஒருவரான் புனிதாவின் துயரத்தை அங்குலம் அங்குலமாக நம் கண் முன்னே கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தின் அராஜகத்தை நம் நெஞ்சில் பதித்துள்ளார் இயக்குனர் புகழேந்தி.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப் பார்த்த, அதற்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படத்தை பார்த்தாவது அவர்கள் தங்கள் பாவத்திற்கு பிரியாசித்தம் தேடுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேராசிரியர், ஒரு இல்லத்தரசி இரு மருத்துவர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு திருநங்கை, முகம் தெரியாத ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் மனிதநேயத்துடன் புனிதாவை நேசித்து அச்சிறுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தன. இந்தியாவின் சாதாரண குடிமக்களான இவர்கள் பெரும் சவால்களுக்கிடையில் வெளிப்படுத்தும் மனிதநேயம் ஈழத்தில் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களிடம் இருக்கவில்லை. இவர்களது மனப்போக்கைத் தான் பேராசிரியர் நடசேனின் மாமியார் இப்படத்தில் பிரதிபலிக்கிறார்.

திரைப்படம் என்றாலே விரசம் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் சோகத்தை சித்தரித்து நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கையை தூண்டும் வகையில் உச்சிதனை முகர்நதால் அமைந்துள்ளது. இரண்டு திரைப்படங்கள் என் உள்ளத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தி கண்களில் கண்ணீரை நினைக்கும் போதெல்லாம் வரவழைத்தன. அதில் ஒன்று முஸ்தபா அக்காத் தயாரித்த உமர் முக்தார். மற்றொன்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால்.

இது மற்றுமொர் படம் அல்ல. தமிழகத்தில் வாழும் மனிதநேயமுள்ள அனைவரின் மனசாட்சி.

நன்றி - அதிர்வு


No comments

Powered by Blogger.