Header Ads



தூங்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள்..! அவமானப்படும் சமூகம்...!!


லதீப் பாரூக்

முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்கும் எரியும் பிரச்சினைகள் தொடர்பான அவர்களது நிலைப்பாடு என்ன?  தமிழரது பிரச்சினைகளைத் தீர்ப்பதை இலக்காகக் கொண்டு, அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், முஸ்லிம் வட்டாரங்களில் எழுப்பப்படும் கேள்விகளே இவை.

எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களது நீண்ட தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை போலவே தெரிகிறது. பிரச்சினைகளை உரிய முறையில் வெளிப்படுத்தாமல் முஸ்லிம்களை அவர்கள் கைவிட்டுள்ளனர் போலவே உள்ளது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவருக்குப் பின் அடுத்தவர் என, தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டனர். "பலவீனமான எதிர்க்கட்சியுடன் இருந்து கொண்டு நேரத்தை விரயமாக்குவதில் பயனில்லை. அரசாங்கத்தோடு இணைந்து சமூகத்திற்கு உதவி செய்வதே சிறந்தது" என்று கூறிக்கொண்டுதான் இவர்கள் அரசாங்கத்தோடு தொடர்பு (Deal) வைத்துக்கொண்டனர். 

இப்போது அவர்கள் அரசாங்கத்தில்தான் உள்ளனர். அவர்கள் சமூகப் பிரச்சினைகளை முன்னெடுப்பார்கள் என்றுதான் முஸ்லிம்கள் எண்ணினர். ஆனால், அவர்கள் சமூகத்திற்கு உதவுவதற்குப் பதிலாக தாம் மட்டுமே பயன் பெறுகின்றனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காகவும் சுய இலாபங்களுக்காகவும் சமூகத்தைக் கைவிட்டு விட்டனர் என்ற எண்ணம் சமூக மட்டத்தில் வளர்ந்து வருகிறது. இனியும் அவர்கள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என்ற கருத்தும் வளர்ந்து வருகிறது.

நஷ்டமடைந்த நிறுவனங்களது சொத்துக்களைக் கையேற்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் முழு அமைதிகாத்தனர். அரச பங்காளிகளான ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டன. அப்போதுகூட இவர்கள் வாய்பேசாது மௌனிகளாக இருந்தனர்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனினும், முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதுபோல் இம்முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்கின்றனர். 

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமாதானப் பேச்சானது - எல்லா பல்லின, பலமத, பல்கலாச்சார இலங்கையர்களது நலன்களையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் விடயமாகும். அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு இணைந்துவாழ வேண்டும் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தம். தம்மிடையே பொது அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம். ஆதலால் இந்தப் பேச்சுக்கள் தமிழரோடு மட்டும் சுருக்கப்பட்டு விடக்கூடாது. அனைத்து இலங்கையரும் சமத்துவமாக நடத்தப்படுவர் என்ற உத்தரவாதம், எல்லா சிறுபான்மை சமூகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தமை, நாட்டுக்கு ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளது. முழுமையான திட்ட மொன்றின் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாய்ப்பாகக் கூட அது இருக்கலாம். 

ஆனால், நாட்டில் இரண்டு சமூகங்கள் மட்டுமே உள்ளது என்ற மனப்பதிவையே தற்போது நடைபெறும் சமாதானப் பேச்சு தருகிறது. அரசாங்கத்தால் சிங்களவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழரது அபிலாஷைகளும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன என்பதுதான் வெளிப்பார்வை. 

ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் அமைப்பு நாட்டின் ஜனநாயகத்தை ‘வண் மேன் ஷோ’ ஆக மாற்றியுள்ளது. சர்வவல்லமை படைத்த ஜனாதிபதி சட்டத்துக்கு மேலால் இருந்து கொண்டு, யாருக்கும் வகைசொல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆதலால், முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கான தீர்வைக்காண, இம்முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசியிருந்திருக்க வேண்டும். 

இவ்வாறான சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதியைச் சந்திப்பதைத் தடுக்கும் விடயம் என்ன என்பது, புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்றாகவே உள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு இதனைச் செய்கிறதுதானே. நிச்சயமாக ஜனாதிபதி இவர்களை விரட்டிவிடப் போவதில்லை. அவர்களது ஆதங்கங்களையும் அவர் கேட்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு பிரச்சினை தீர்க்கப்படலாம் அல்லது தீர்க்கப்படாமலும் விடலாம். ஆனால், அந்த விடயம் தொடர்பான அறிவாவது அவருக்கு இருக்க வேண்டும். 

எனினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கவலைக்குரிய வகையில் தோல்வி கண்டிருக்கின்றனர். முஸ்லிம் விவகாரங்களை எழுப்புவதன் மூலம் ஜனாதிபதியின் எதிர்ப்பை சம்பாதித்து, அதனால் தமது பதவிகளையும் சுகபோகங்களையும் இழந்து விடக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர் என்ற எண்ணம்தான் சமூகத்தில் காணப்படுகிறது. ஆகவே, அவர்கள் தமது பதவி, பட்டங்களை இழக்க விரும்பவில்லை. 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, முஸ்லிம்கள் ஏனைய இன, சமயக் குழுக்களுடன் அமைதியான முறையில் உறவுகொள்கின்ற சமூகத்தினர் என சரியாகவே சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு அவர்கள் அக்கலாச்சாரங்களை தமது சொந்தக் கலாச்சாரத்துடன் சுமுகமாக இடைத் தொடர்புடையதாய் மாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். "அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கோ அல்லது அழிவுக்கோ தம்மை ஒன்றுதிரட்டியிருக்கவில்லை."

அதற்குப் பகரமாக, வரலாற்றின் நெருக்கடியான காலங்களில், நாட்டைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம்கள் பெரும்         பங்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 1948 சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தை அவர்கள் முழுமையாக ஆதரித்தார்கள். அதில் அவர்களுக்கு சில பாதிப்புகள் கூட இருந்தன. பண்டாரநாயக்கவின் உணர்ச்சிகரமான கூற்றுகள் முஸ்லிம்களது பங்களிப்பையும் தியாகத்தையும் அதிகளவில் பேசியது. இதை தற்போதைய தலைமுறையினர் அறியாமல் இருக்கக் கூடும். 

இதன் விளைவாக முஸ்லிம்கள் நாட்டைப் பிரிக்கும் புலிகளது கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார்கள். நாட்டின் ஒருமைப்பாடு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். ஆனால், அவர்கள் இந்த துரதிஷ்டவசமான தேவையற்ற இன மோதலுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இந்த யுத்தத்தால் மரணம், நிம்மதியின்மை, சொத்திழப்பு, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்வு போன்றவையே நிகழ்ந்தன. ஆனால், நாட்டுக்கான அவர்களது பங்களிப்பு பற்றி குறைந்தளவே பேசப்படுகிறது அல்லது அறவே பேசப்படுவதில்லை. 

நாட்டின் ஆயுதப் படையினர் ஆரம்ப காலங்களில் இப்போதைய அளவுக்கு ஆயுதரீதியான பலங்களைக் கொண்டிருக்க வில்லை. அந்தக் காலங்களில் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் பிரிவினைவாதக் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால், நாட்டின் வரலாறு இன்று வித்தியாசமாக அமைந்திருக்கும். 

இன்றும்கூட முஸ்லிம் சமூகத்தின் 70 வீதமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வாழ்கின்றனர். பொதுவாக முஸ்லிம்களது பொருளாதாரம் குறித்த தவறான கருத்தே நிலவுகிறது. சுனாமி காரணமாக முஸ்லிம் சமூகத்தின் ஒரு வீதமானோர் அழிந்து விட்டனர். கொடையாளி நாடுகளிடமிருந்து கிடைத்த சுனாமி உதவியை முஸ்லிம்களுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக அமைந்தது. சுனாமிக்குப் பின்னரான கட்டமைப்பு உடன்பாட்டில் முஸ்லிம்களது விடயமும் பேசப்பட்டது. ஆனால், இறுதியில் அதுவும் இயற்கை மரணம் அடைந்து விட்டது. 

சமூகத்தைப் பற்றி கவலைப் படுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன. கொழும்பிலுள்ள முஸ்லிம்களது சேரிப்புறங்களுக்கு ஒரு சாதாரண விஜயத்தை மேற்கொண்டால் கூட கடுமையான வறுமை, எழுத்தறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, அதனோடு தொடர்புபட்ட சமூகப் பிரச்சினைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கே பெரிதும் சிரமப்படுகின்றனர். நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்தினது நிலையும் இதுபோன்றுதான் உள்ளது. 

இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. போர் முடிந்த பின்னரும் கூட அது நடைபெறவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையைப் பாதிக்கும் எண்ணற்ற விடயங்களுள் அகப்பட்டுள்ளனர். 

இங்குள்ள மற்றும் வெளிநாடுகளிலுள்ள சமாதான செயற்பாட்டாளர்கள், தமிழர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி முஸ்லிம்களை வசதியாக மறந்து விடுகின்றனர். அவர்களது பரிதாபகரமான நிலையை அலட்சியப்படுத்துவது தெளிவான நீதி மறுப்பாகும். முஸ்லிம்கள் இந்நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய சமூகம். அவர்களை எப்படிப் புறக்கணிக்க முடியும்? இந்த சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது சமூகத்தை அவமானப்படுத்துகிறது.

No comments

Powered by Blogger.