Header Ads



சதாம் ஹுசைனை மாற்றாதீர் - ஏறாவூரில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1978ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளி அழிவு ஏற்பட்டபோது ஈராக் உதவியுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அப்போது அந்த நாட்டின் அதிபராக சதாம் ஹூஸைன் பதவியிலிருந்தமையினால் இக் கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம் என மக்களால் பெயர் சூட்டப்பட்டது.

ஈராக்கில் தற்போது அரசியலிலும் ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இக்கிராமத்திற்கு மீண்டும் உதவ இலங்கையிலுள்ள ஈராக் தூதுவராலயம் முன்வந்துள்ளது.

இருப்பினும் சதாம் ஹூஸைன் கிராமம் என அழைக்கப்படும் இக் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்யும்பட்சத்திலேயே அது சாத்தியபப்டும் என்று இலங்கைக்கான ஈராக் தூதுவர் ஹதன் தாஹா ஹலாப் கடந்த செவ்வாய்கிழமை அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயர் மாற்றத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகமும் இணக்கம் தெரிவித்து பிரதேச அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்ட நிலையிலேயே உள்ளூர் மக்கள் இதற்கு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளிவாசல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பிஅவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





No comments

Powered by Blogger.