Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக சதி..!


தமது பாரம்பரிய தாயகப்பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிவரும் முஸ்லிம்கள் குறித்து சில தமிழ் ஊடகங்கள் நச்சுக் கருத்துக்களை விதைத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அல்லது இருவர் செய்யும் தவறுகள் மற்றும் குற்றங்களுக்காக முழு யாழ் சமூகத்தையும் குற்றவாளியாக நோக்கும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதையும் நோக்க முடிகிறது.

அண்மையில் யாழ் உதயன் பத்திரிகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாண இரும்பு வளத்தை சூறையாடுவதாக செய்தி வெளியாகவே இதுகுறித்து யாழ் முஸ்லிம் வலைத்தளமானது www.yarlmuslim.blogspot.com இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை செய்திருந்ததுடன், அதனை முஸ்லிம் மீடியா போரத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்தது. இதனால் நவமணி பத்திரிகை இவ்விவகாரத்தை தனது ஆசிரியர் தலையங்கம் மூலம் வெளிப்படுத்தி, யாழ் முஸ்லிம்களுக்கு எதிரான செய்தியை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது (நேற்று சனிக்கிழமை) மற்றுமொரு தமிழ் இணையம் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்களே என்றும், அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் எனவும் புதுத்தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிவரும் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை சீரழித்து வருவதாகவும் குற்றசம் சுமத்தியுள்ளது.

உண்மையில் இந்தச் செய்தியானது ஒட்டுமொத்த யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி, தமிழர் - முஸ்லிமகளிடையே இனக்குரோதத்தை வளர்க்கவுமே வழிவகுக்கும். யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஒருவர் அல்லது இருவர் செய்யும் போதைப் பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை தொடர்புபடுத்துவது நியாயமானதல்ல.

ஒருவர் குற்றவாளி என்றால் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உண்டு. சட்டத்தை கையிலெடுக்கவும், அவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் எந்த தமிழ் ஊடகமும் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் குற்றவாளி என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு அழைப்பதோ அல்லது அந்த சமூகம் மீது சேறு பூசுவதோ ஊடக தர்மமோ அல்லது நாகரீகமோ அல்ல.

மேலும் ஒருவர் குற்றவாளி என்றால் அவர் சார்ந்த சமூகத்தின் பெயரை சேர்ந்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மம் சார்ந்தது அல்ல. அது ஊடகநெறிக் கோவையில் உள்ளடங்கும் விவகாரமும் அல்ல. அந்தவகையில் எதிர்காலத்திலாவது தமிழ் ஊடகங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்கள் விவகாரம் குறித்து நிதானப்போக்கை கடைபிடிப்பதுடன், யாழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்கள் செய்யும் தவறுகள் மற்றும் குற்றங்களுக்கு யாழ் முஸ்லிம் சமூகத்தை எந்தவகையிலும் தொடர்புபடுத்தி செயற்பட வேண்டாமென நாம் நியாயத்தின் பெயரிலும், தர்மத்தின் பெயரிலும் தமிழ் ஊடகங்களிடம் கோரிக்கைவிடுக்க விரும்புகிறோம்..!

யாழ் முஸ்லிம் வலைத்தளம்
www.yarlmuslim.blogspot.com

No comments

Powered by Blogger.