Header Ads



இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவகாரம் பூதாகரமாகிறது


கிரிக்கெட் வீரர்களுக்கு இன்னும் கொடுக்கப்படாதுள்ள சம்பளக் கொடுப்பனவுகள் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலான ஐசிசி கூறியுள்ளது.

உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்திய பின்னர், தாம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் தமது கிரிக்கெட் வீரர்களுக்கு மாதங்கள் கணக்கில் சம்பளம் கொடுக்கவில்லையென்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த மாதம் பிபிசியிடம் கூறியிருந்தது.

இதுதவிர, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுபடவில்லையென்று உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதேவேளை, இதுதொடர்பிலான ஆலோசனை உதவிகளுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தம்முடன் தொடர்பு கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சங்கங்களின் சம்மேளனமான எஃப்ஐசிஏ தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தற்காலிக தீர்வு குறித்து ஆராய்வதற்காக என்பதற்காக ஐசிசியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட் சங்கங்களின் சம்மேளனத்தின் மூத்த நிறைவேற்று அதிகாரி டிம் மே பிபிசியிடம் கூறினார்.

பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் விளையாடுவதை நிறுத்துவது தான் வீரர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலமை ஏற்படாது என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள பாக்கியை கொடுக்காமல் இருப்பது தொழில் ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் டிம் மே பிபிசிடம் கூறினார்.

மூன்று பில்லியன் ரூபாய் கடனில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்

கடந்த உலக கிண்ணத்தின் பின்னர் இலங்கை அணி எந்த தொடரிலும் வெற்றி பெறவில்லை கடந்த வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற ஆய்வுக்குகுழுவின் அறிக்கை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வரவு செலவுக் கணக்கு மூன்று பில்லியன் ரூபாய் கடன் இருப்பதாக காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா மற்றும் பங்களதேஷுடன் இணைந்து இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்திய இலங்கை அதன் பின்னர், சொந்த மண்ணிலோ வெளிநாட்டிலோ எந்தவொரு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெறவில்லை.

இதேவேளை, அண்மையில் சந்திப்பொன்றை நடத்திய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அணியிலுள்ள மூத்தவீரர்கள் அணித்தலைவர் திலக்கரட்ண டில்ஷானுடன் ஒத்துழைத்து, ஒற்றுமையான அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தோல்விப் படலத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு கூறியுள்ளது.

முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் மற்றும் சனத் ஜயசூரிய போன்ற வீரர்களின் ஓய்வு மட்டுமன்றி, இலங்கை அணியின் அண்மைய தோல்விகளுக்கு சம்பளப்பிரச்சனைகளும் முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்று இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்பே ஆகிய நாடுகளைத் தவிர மற்ற அனைத்து டெஸ்போட்டியில் ஈடுபடும் நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எஃப்ஐசிஏ சுட்டிக்காட்டுகின்றது.

வீரர்கள் இதனைக் கூறாதபோதிலும் சம்பள விவகாரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அது அணியில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது என்றும் டிம் மே பிபிசியிடம் கூறினார். இலங்கை மக்களின் நலன்கருதி இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணமுடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.