Header Ads



ஒஸாமாவை உளவுபார்த்த விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது



ஈரானிய வான்பரப்பில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட அவ்விமானம் பின்னர் ஈரானியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளை உளவுபார்க்கவே அமெரிக்கா இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி இஸ்ரேலும் இத்தகைய நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இதேவேளை தமது வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து அணுச் செறிவாக்கல் செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் அறிவித்திருந்தது. ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.