Header Ads



மாணவர்கள் மீது அரச அடக்குமுறை - எதிர்த்து ஆர்ப்பாட்டம்


அரசு பல்கலைக்கழகக் கல்வியைத் தனியார் மயப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சியை கைவிடுமாறும் மாணவர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளைக் கைவிடுமாறு வலியுறுத்தியும் இன்று நண்பகல் பேராதனை பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகி சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது. இதனால், பேராதனை - கண்டி வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

இங்கு மாணவர்கள் மத்தியில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லங்கா மஹேல உரையாற்றும் போது , அரசு தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் நாட்டில் இலவசக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் முயற்சியாகும். இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தோன்றி வரும் எதிர்ப்புக்ளை அடக்குவதற்காக அரசு மாணவர்களை அடக்கி ஆள முற்படுகின்றது.

மாணவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வகுப்புத் தடைகளை ஏற்படுத்தியும் மாணவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் இலவசக் கல்வியை இல்லாமல் செய்ய மேற்கொள்ளும் சகல முயற்சிகளையும் வன்மையாக எதிர்க்கின்றோம். இம்முயற்சியை எவர் மேற்கொண்டாலும் அது ஏழைகளின் கல்விக்கு வைக்கும் வேட்டு ஆகும். அரசியல் ஆதாயத்திற்காக ஏழைகளின் கல்வியில் கைவைக்க முயற்சிப்பவர்கள் உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். 

மாணவர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மூலம் மாணவர்களின் குரலை ஒரு போதும் நசுக்க முடியாது. எமது சகோதர மாணவர்கள் நால்வர் போகம்பறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும். இம்மாணவ சகோதரர்களின் கல்வியைத் தொடர இடமளிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர். அரசின் வரவு செலவுத்திட்டம் தனியார் கல்விக்கு ஊக்கமளிப்பதாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

இங்கு மாணவர்கள் வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறும் சுலோகங்களை கோஷித்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். 

No comments

Powered by Blogger.