Header Ads



ஐ.தே.க. தலைமை பதவியை கையேற்க தயார் - கரு அறிவிப்பு


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிர்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தியோகபூர்மாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கட்சியின் யாப்பிற்கிணங்க எதிர்காலத்தில் இடம்பெறும், தலைமைத்துவ தேர்தலில் கட்சித்தலைமையின் பொருட்டு போட்டியிடுமாறு அவர், கரு ஜயசூரியவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய இன்று மாலை அளவில் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். குறித்த அழைப்பு எதிர்க்கட்சியின் மாற்றுக்குழுவான சஜித் பிரேமதாச தரப்பினரால் விடுக்கப்பட்டிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வினவியது. அதற்கு பதிலளித்த அவர், கட்சியின் யாப்பிற்கிணங்க தலைமைத்துவ தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின், அதுகுறித்து எதிர்வரும் 31 ம் திகதிக்கு முன்னர் இடம்பெறும் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

அதன்போது, கட்சித் தலைமைத்துவம் உள்ளிட்ட 5 பிரதான பதவிகளுக்கான பிரேரணைகளை முன்வைக்க முடியும் என திஸ்ஸ அத்தநாயக தெரிவித்தார்.குறித்த தருணத்தில் கட்சியின் தலைமைத்துவத்திற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டால், முதலில் ஒருமைப்பாட்டின் அடிப்படையில், பதவிகளை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

அவ்வாறு செயற்பட முடியாத பட்சத்தில் கட்சி யாப்பின் 8 இல் 1 ஆம் சரத்தின் கீழ் வேட்பு மனு கோரி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு கட்சியின் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கான பதவியை ஏற்பதற்கு முன்வருபவர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் தொடர்பான வரையறை அறிக்கையொன்று தற்போது பொது செயலாளரினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் புதன்கிழமை மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் செயற்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வரவு செலவு திட்டம் உட்பட, 3 முக்கிய காரணங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.