Header Ads



ஹிலாரி கெஞ்சினார் - கிலானி நிராகரித்தார்


"நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா, பாக்., உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் பான் நகரில் இன்று துவங்க உள்ள ஆப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்ட அவரது கோரிக்கையை, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நிராகரித்துவிட்டார்.

சரிக்கட்ட முயற்சிகள்: பாக்., எல்லைச்சாவடி மீது நேட்டோ தாக்குதல் நடத்திய விவகாரத்தால், அமெரிக்கா - பாக்., உறவு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு தரப்பிலும் இந்தச் சீர்குலைவை சரிக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொலைபேசியில் ஹிலாரி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி நேற்று முன்தினம் மாலை, பாக்., பிரதமர் கிலானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நேட்டோ தாக்குதலில் பாக்., வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். அத்தாக்குதல் உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததல்ல எனக் குறிப்பிட்ட அவர், விசாரணை முடியும் வரை பாக்., பொறுத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், "பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மிக உயர்வாக மதிக்கிறது. இத்தாக்குதல், இரு தரப்பு உறவை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம். இரு தரப்பும் ஒருமித்த நோக்கங்களை உடையவை' எனவும் கூறினார்.

பாகிஸ்தான் பிடிவாதம்: அதோடு, ஜெர்மனியின் பான் நகரில், இன்று துவங்க உள்ள ஆப்கன் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் அவர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த கிலானி, மூன்று நாட்களுக்கு முன்பு கூடிய பார்லிமென்ட் நிலைக் குழு, மாநாட்டை புறக்கணிப்பதாக அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இத்தகவல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் விருப்பம்: நேட்டோ தாக்குதலால் இரு தரப்பு உறவும் பாதிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. வெள்ளை மாளிகை, வெளியுறவு அமைச்சகம், பென்டகன் என்ற மூன்று அமைப்புகளும், பான் மாநாட்டில் பாக்., கலந்து கொள்ள வேண்டும் என்பதை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் மூலம் இது தெளிவாகிறது.

தவறான தகவல் தந்த நேட்டோ: இந்நிலையில், சலாலா எல்லைச்சாவடி மீது தாக்குதல் நடத்த பாக்., ராணுவம் அனுமதி அளித்த பின் தான் தாக்குதல் நிகழ்ந்தது என்ற அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைக்கு, பாக்.,ராணுவ அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார். "சம்பந்தப்பட்ட இடத்தில், தலிபான்கள் ஒளிந்திருப்பதாகத் தான் நேட்டோ எங்களுக்கு முதலில் தகவல் தந்தது. அதன் அடிப்படையில் தான் பாக்., அனுமதியளித்தது. ஆனால், நள்ளிரவில் தாக்குதல் நடந்ததால், விடிந்த பின் தான் அது, பாக்., எல்லைச்சாவடி என்பது தெரியவந்தது. அமெரிக்கா எங்களுக்கு தவறான தகவலை தந்ததால் தான் இது நடந்தது' என அவர் பேட்டியளித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த பாக்., பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப் படை உறுப்பினர்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்சாய் குற்றச்சாட்டு: பான் நகர் மாநாட்டை பாக்., புறக்கணித்தது குறித்து, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கூறுகையில், "தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க இன்று வரை பாக்., மறுத்து வருகிறது' என குற்றம் சாட்டியுள்ளார்.

பான் நகரில் என்ன நடக்கப் போகிறது?

* கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின், ஆப்கனுக்குள் அமெரிக்கப் படைகள் ஊடுருவி, தலிபான்கள் ஆட்சியைக் கவிழ்த்தன.

* 2001, டிசம்பரில், ஜெர்மனியின் பான் நகரில், ஆப்கன் பிரதிநிதிகள், ஐ.நா., மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்ட முதல் பான் நகர் மாநாடு நடந்தது.

* அதில், ஆப்கனில் நிலைத்த அரசு ஏற்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நேட்டோ படை ஆப்கனில் நிலை நிறுத்தப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

* முதல் பான் நகர் மாநாடு நடந்து முடிந்து தற்போது 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது பான் நகர் மாநாடு இன்று துவங்குகிறது.

* இதில், அமெரிக்கா, ஆப்கன் மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என, பலர் கலந்து கொள்கின்றனர்.

* ஹக்கானி குழு நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானியின் சகோதரர் ஹாஜி இப்ராகிம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* தலிபான்களும், பஸ்தூன் பழங்குடியினப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.

* நேட்டோ தாக்குதலால் எரிச்சலடைந்துள்ள பாகிஸ்தான் இதில் கலந்து கொள்ள மறுத்து விட்டது. 

* 2014ல், நேட்டோ படைகள் ஆப்கனை விட்டு வெளியேறுகின்றன. அதையடுத்து, ஆப்கனின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பது தான் இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்.


No comments

Powered by Blogger.