Header Ads



யூரோ நாடுகளுக்கிடையில் புதிய நிதி ஒருங்கிணைப்பு..?


"யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடி தீர்வதற்கு, யூரோ நாடுகளுக்கிடையிலான நிதி ஒருங்கிணைப்பு அவசியம். இதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யூரோ கடன் பத்திரங்கள் வெளியீடு போன்ற முயற்சிகள், இப்பிரச்னையைத் தீர்க்காது' என, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

முடங்குமா யூரோ? : யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடி, தற்போது மிகவும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. திட்டமிட்டபடி, கிரீஸ், இத்தாலியில் அரசியல் தலைமைகள் மாற்றப்பட்டு விட்டன. தொடர்ந்து, கிரீஸ் தனது 8 பில்லியன் யூரோ நிதியுதவியையும் பெற்று விட்டது. இந்நிலையில், கடன் நெருக்கடி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியையும் விழுங்கிவிடும் என்ற அச்சமும், இதன் பலனாக, யூரோ கரன்சி விரைவில் முடங்கிவிடலாம் என்ற பீதியும் பரவி வருகின்றன.

இறுதி முடிவு : இப்பிரச்னைக்கு, இறுதி முடிவு எடுப்பதற்காக, வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், யூரோ மண்டலத்தின் 17 நாட்டுத் தலைவர்களும் கூடி கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் மற்றும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இருவரும் இணைந்து, உறுதியான தீர்வை முன்மொழிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு முன்பாக, நாளை மெர்க்கெல்லும், சர்கோசியும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.

நிதி ஒருங்கிணைப்பு : இதற்கிடையில், நேற்று ஜெர்மனி பார்லிமென்டில் உரையாற்றிய மெர்க்கெல் கூறியதாவது: யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான நிதி ஒருங்கிணைப்பு அவசியம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில், இதுகுறித்து உறுதியான விதிகள் இல்லாததால், பல நாடுகள் தங்கள் இஷ்டம் போல பட்ஜெட்டைத் தயாரித்து, மேலும் மேலும் கடனாகின்றன.

புதிய ஒப்பந்தம் : ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம், வரி விதித்தல், பட்ஜெட் ஆகியவற்றில் ஒப்பந்தத்தை மீறும் நாடுகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், இந்த மாற்றங்கள் வகை செய்யும். மேலும், நாடுகளுக்கிடையில், நிதி விஷயத்தில் ஓர் ஒழுங்கு முறை உருவாகும்.யூரோ மண்டல நாடுகள் அனைத்தும், பிரஸ்ஸல்சில் வைத்துத் தான் தங்கள் பட்ஜெட்டைத் தீர்மானிக்க வேண்டும் என்பதில்லை. இவ்விஷயத்தில், ஜெர்மனி தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது.

தீர்வுக்கு காலம் ஆகும் : யூரோ மண்டலக் கடன் நெருக்கடிக்கு, உடனடித் தீர்வுகளாகக் கூறப்படுபவை எதுவும் உதவாது. எந்தத் தீர்வானாலும், அது நீண்ட கால நோக்கின் அடிப்படையில் தான் இருக்க முடியும். இப்பிரச்னை, ஒரு மாரத்தான் ஓட்டப் போட்டி போல. ஓடுபவர் முதலில் இருந்தே மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஓட வேண்டும்.

கடன் பத்திரம் வேண்டாம் : தற்போது, ஐரோப்பிய மத்திய வங்கியின் யூரோ கடன் பத்திரங்கள் வெளியிடலாம் என்ற யோசனை பொருத்தமானதல்ல. அது தீர்வும் ஆகாது. பிற நாடுகளின் கடன்களுக்கு, மற்ற நாடுகள் கூட்டுப் பொறுப்பாளியாக முடியாது. ஐரோப்பிய மத்திய வங்கியின் வேலை, நிதி ஸ்திரத் தன்மையைக் கண்காணிப்பது மட்டுமே. அமெரிக்கா அல்லது பிரிட்டன் மத்திய வங்கியைப் போல அல்லாமல், அதன் பணிகள் வேறுபட்டவை.

அதேநேரம், ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பு, தனது பணிகளைத் தொடர்ந்து திட்டமிட்டபடி செய்யும். அதன் நிதியாதாரத்தை, யாரும் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு, மெர்க்கெல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பேசிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "யூரோ மண்டல நாடுகளின் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் வகையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்துத் தான், மெர்க்கெல் இவ்வாறு உரையாற்றியுள்ளார். மெர்க்கெல் கூறிய, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான புதிய நிதி ஒருங்கிணைப்பு பற்றிய விவரங்கள், அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதங்களில் யூரோ அம்பேல்' : அதிரடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள், யூரோ கரன்சி காணாமல் போய்விடும் என, ஜெர்மனியின் பிரபல பொருளாதார நிபுணர் குஸ்தவ் ஹார்ன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடன் நெருக்கடியை குறைக்க, ஒரே ஒரு வழி, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு உள்ளது. கடனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான வட்டியை மட்டும், வங்கி குறைத்துக் கொள்ளலாம். இவ்விஷயத்தில், சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) உதவலாம்.

ஆனால், அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா தலையிடும் படி ஆகிவிடும். அதேபோல, ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டால், அதுவும் உதவ முடியும். எப்படியாயினும், உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இன்னும் 3 முதல் 6 மாதங்களில், யூரோ அம்பேல் தான். இவ்வாறு, ஹார்ன் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.