Header Ads



யாழ்ப்பாணத்தில் களமிறங்கப்போகும் முஸ்லிம்கள் யார்..?


அபூ மஸ்லமா

இது நடைபெற ஆரம்பித்தது 1970ன் இறுதிகளில். ஒரு சமூகம் விழித்திருந்த போது இன்னொரு சமூகம் நித்திரையில் இருந்தது. ஒரு சமூகம் தன்னை தயார் செய்த போதும் மறு சமூகம் நித்திரையில் இருந்தது. முன்னைய சமூகம் தன்னை பற்றிய தீர்ப்பின் வரிகளை எழுதிய போதும் அது அதை உணரவில்லை. இது இரு சமூகங்களின் பழைய கதை.....

விளைவு பின்னைய சமூகம் அகதிகளாக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது. இப்போது இரு சமூகங்களும் ஒரே தளத்தில் தமது வரலாற்றை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் ஒரு சமூகம் மீண்டும் விழிக்க முற்படுகையில் மறு சமூகம் மீண்டும் தூக்கத்தில் இருக்கவே ஆசைப்படுகிறது.

நித்திரையில் இருந்த சமூகம் என நாம் இங்கு சுட்டுவது முஸ்லிம்களை. குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களை. இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே தமிழர்கள் தொடர்பான அனைத்து நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. போர்த்துகேயர் முதல் இன்றைய ஹம்பாந்தோட்டை தலைமை வரை இவர்களை மையமாகக் கொண்டே பல தீர்மானங்களை எடுக்கின்றனர்.

கல்வியிலும், வட்டி தொழிலிலும் , புலம்பெயர் வாழ்விலும், சாதித்துவ கட்டமைப்பிலும், போராட்டத்திலும் என பலவற்றில் முன்னிற்கும் யாழ்ப்பாண தமிழர்களுடன் மீண்டும் ஒரு சமூக வாழ்வை பகிர்ந்து கொள்ள முற்பட்டுள்ளனர் யாழ் முஸ்லிம்கள்.

“எமது தாயகமும் வடக்கே” என்ற தாயக மண்ணின் இருப்பிற்கான முனைவு என்ற கோணத்தில் இது சரியாக தென்பட்டாலும் அந்த இருத்தலிற்கான இருப்பு தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன.

மீண்டும் யாழ் மண்ணில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர். குடியேறவும் உள்ளனர். ஆனால் இவர்களிடம் எந்த விதமான முன்னேற்றகரமான சிந்தனைகளோ, அல்லது கடந்தகால வாசிப்புகளோ இருப்பதாக புலப்படவில்லை. ஒரு அகதி சமூகத்தின் 20 வருடகால அறுவடைகளின் பெறுபேறுகளாகவே இன்றைய யாழ் முஸ்லிம்களின் இளைய தலைமுறையை பார்க்க முடிகிறது.

கல்வியறிவற்ற, இஸ்லாத்தின் கட்டளைகளை புறந்தள்ளிய, சகிப்புத்தன்மையற்ற, மார்க்க அறிவைவிட்டும் விலகிய, ஒற்றுமையற்ற ஒர் ஏழை சமூகமாக யாழ் முஸ்லிம்கள் மாறி நிற்கிறார்கள். அவர்களின் இந்த மாற்றத்திற்கு கணிசமான காரணம் அவர்கள் அகதிகளாக்கப்பட்டமையே.

குழுத்தலைமை, கும்பல் அரசியல், சட்டவிரோத வியாபாரங்கள், பூட்சுவா வர்க்க முரண்பாடுகள், சுயநல சமூகவியல், அரசியல் செல்நெறிகளிற்கு மாற்றமான சிந்தனைகள், வெளிபிரதேச அமைப்புகளின் செல்வாக்கு என ஒட்டுமொத்த யாழ் முஸ்லிம்களும் குழம்பி நிற்கிறார்கள். இப்படியான ஒரு களத்தில் நாம் சில புரிதல்களை நோக்கியும், மீள்வாசிப்புக்களை நோக்கியும் நகர்வது அவசியம்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாண தமிழர்களின் நிகழ்தகவுகள் தொடர்பில் மிகவும் அக்கறைகொள்ளல் காலத்தின் கட்டாயமாகும். “விடுதலை” என்ற பெயரில் அழிவுகளை உள்வாங்கிய சக்திகள் மீண்டும் தமது கட்டமைப்பு பற்றி சிந்திக்கும் காலைகளில் நாம் கோப்ரடிவ் எனப்படும் சங்கக்கடைகளில் கியூவில் மாவிற்காகவும் எண்ணெய்காகவும் முரண்பட்டுக்கொள்கிறோம் நமக்குள்ளேயே.

பாசிஸ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த புலிகளின் எல்லா வளங்களும் இலங்கை அரசால் அழிக்கப்படவில்லை. புலிகளின் “யாழ் குடா நாட்டு தாக்குதல் அணிகள்”, “பிஸ்டல் குழுவினர்”, “உளவுப் பிரிவினர்", வன்னியில் இருந்து தப்பிச்சென்ற “சைபர் அணியினர்” போன்ற பல கட்டமைப்புக்கள் இன்றும் சேதமில்லாமல் பேணப்பட்டு வருகின்றன என்பதே கசப்பான உண்மை.

விடுதலை போராட்டத்தில் விட்ட தவறுகளை இனங்கண்டு, ஒழுங்குபடுத்தி, மாற்றுத்தலைமையை தேடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். “இலங்கை அரசிற்கு எதிரான வடகிழக்கு தமிழர்களின் யுத்தம் தன் எல்லைகளை கடந்து இலங்கை அரசிற்கு எதிரான சர்வதேச தமிழர்களின் யுத்தமாக” பரிணமித்துள்ளது.

உலக ஏகாதிபத்திய நாடுகளின் செல்நெறிகளிற்கு ஏற்பானதாக தமது போராட்டத்தை மீள்கட்டியமைத்தல் எனும் கருத்தியல் உருவாகி அது தன்னை மெல்ல சர்வதேச நாடுகளின் சதிப்பின்னலுடன் கூடிய அரசியல் நகர்வை நோக்கி பயணிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

நேற்றைய பிரபாகரனின் பிறந்ததின வைபவங்கள் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மத்தியிலும், இன்னும் பலரிற்கு மத்தியிலும் மெல்ல கொண்டாடப்பட்டுள்ளன. கடந்த வாரங்களில் கிளிநொச்சியில் இரகசியமான முறையில் புலிகளின் சில சந்திப்புக்கள் நிகழ்ந்துள்ளன. யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய முனுமுனுப்புகள் மெல்ல ஆரம்பித்து அரச அதிபரின் வாயில் இருந்து வெளிவரும் அளவிற்கு சில விவகாரங்கள் எல்லைகளை மீறி சென்றுள்ளன. தமிழ் ஊடகங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி குறை கூறி எழுதத்துவங்கி விட்டன.

இவற்றையெல்லாம் உள்வாங்காதவர்களாக நாம் இரும்பு வியாபாரம், ஆட்டு வியாபாரம், மாட்டு வியாபாரம் என பாலைவன பரதேசிகள் போன்று எம் வாழ்வை வடிவமைக்க முற்பட்டுள்ளோம். தமிழர்களின் போராட்ட வாகனமே அழிக்கப்பட்டுள்ளதேயன்றி போராட்டமல்ல. சில பொழுதுகளில் சரியான தலைமை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதன் ஊடாக தமது இலக்குகளை அடைந்து கொள்ளவும் கூடும்.

அவர்கள் எதை அடைந்தாலும் அடையாவிட்டாலும் நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, யாழ்ப்பான தமிழர்களிடம் முஸ்லிம்கள் தொடர்பான பழைய பூஞ்சணம் பிடித்த கருத்துக்களே இன்னமும் இருக்கின்றன என்பதே உண்மை.

முஸ்லிம்களை அவர்கள் இன்றும் “இஸ்லாமிய தமிழர்கள்” எனும் கருத்திலேயே பார்க்க முற்பட்டுள்ளனர். வெள்ளாளர்களிற்கு கீழாகவும் நலவர்களிற்கு மேலாகவும் இடை சொருகப்பட்ட சாதியே இஸ்லாமிய தமிழர் ஆவர். காலச்சுழற்சியிலும், சிங்கள தேசம் செய்யும் முட்டாள்தனங்களிலும் மீண்டும் தமிழர்கள் ஆதிக்க சக்தியாகவோ அல்லது போராட்ட சக்தியாகவோ உருவெடுக்க வாய்ப்புக்கள் உள்ளன.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் சமூக பாதுகாப்பை ஒரு போதும் தமிழர் தலைமை உறுதிப்படுத்த போவதில்லை. சிங்கள தலைமையும் அவ்வாறே.
எமது இருப்பை நாமே தக்க வைத்து கொள்ளும் ஒரு இக்கட்டான நிலையில்    நாம் வரலாற்றில் நின்று கொண்டிருக்கின்றோம்.

சாணாக்கியமிக்க அரசியல் பார்வை, தமிழர் போராட்வியலின் செயற்களத்தை விளங்க முற்படுதல், தமிழர் அரசியல் போக்கொழுங்குள் பற்றிய துல்லியமான தெளிவு, சமூக மற்றும் கலாச்சார முரண்பாடுகளிற்கான அடிப்படைகளை விளங்கிக்கொள்ளல், யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே காணப்படும் வர்க்வியலை தகர்த்தல், புலம் பெயர் முஸ்லிம் உறவுகளின் செயற்பாட்டை ஒரு புள்ளியில் ஒன்றிணைத்தல், யாழ் முஸ்லிம்களை அறிவுமயப்படுத்தல், இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அவசரமாக மீள் இணைத்தல், சாணாக்கியமிக்க தலைமைகளை உள்வாங்கள், அந்நிய மக்களை வேகமாக இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தல் என செயற்களம் விரிந்து கிடக்கிறது.

இதையெல்லாம் செய்து முடிக்க எம்மிடையே ஒரு நிறுவனம் தேவை. பொறிமுறை தேவை. தமிழர்கள் யூதர்கள் பற்றியும், இஸ்ரேல் பற்றியும், கிழக்கு திமோர் பற்றியும் சிந்திக்கும் பொழுதுகள் இவை. எமது சமூகத்தின்  எழுச்சிக்கும் இருப்பிற்கும் நாம் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பியல் கட்டமைப்பை உருவாக்குதல் பற்றிய வாசிப்புக்கள் அவசியம். யாழ் மண்ணில் இந்த சமூகத்தின் உயற்ச்சிக்காகவும் மீள்ச்சிக்காகவும் அங்கு தளம் தரித்து களமிறங்கும் முஸ்லிம்கள் யார்?....

எமது பழைய கவிதையின் வரிகள்....

“நீ குடித்த கள்ளைதான் நானும் குடித்தேன்

 நீ பிடித்த முளையைதான் நானும் பிடித்தேன்

நீ பிடித்த துவக்கைதான் நானும் பிடிக்கிறேன்

ஆனால் உனக்கு எதிராக

அடே தமிழா தமிழ் குறுந்தேசிய வாதத்திற்கு அப்பால் நின்று யோசி..

 தமிழ் தேசியம் பச்சை நிறத்திலும் மலரலாம்”

No comments

Powered by Blogger.