Header Ads



இலங்கையுடன் உறவு பேணவேண்டியுள்ளது - பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி


இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதி எயர்சீவ் மார்சல் றொசான் குணதிலக தலைமையிலான  உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்தக் குழுவினர் பாகிஸ்தான் அதிபர் அசிவ் அலி சர்தாரியையும்,அந்த நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

நேற்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை இவர்கள் சந்தித்த போது, இலங்கையின்டனான உறவுகளை பாகிஸ்தான் பெரிதும் மதிப்பதாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக திருப்தி தெரிவித்த சார்தாரி, இலங்கை முக்கிமானதொரு அமைவிடத்தில் இருப்பதால், அதனுடன் வலுவானதொரு உறவை பேண வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்கியதற்கு எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக நன்றி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கான தூதுவர் எயர் சீவ் மார்சல் ஜெயலத் வீரக்கொடி, மற்றும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜனக வல்கம, விமானப்படை அதிகாரி குறூப் கப்டன் ஜனக நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நேற்று பாகிஸ்தானினின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் காலித் சமீம் வைனையும் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இதன்போது, பல்வேறு திட்டங்களின் மூலம் படைகளுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கூட்டுப்படைகளின் தளபதி நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலகவுக்கு பாகிஸ்தான் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

இந்தவாரம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இந்தியா பயணமாகவுள்ள நிலையில், கூட்டுப்படைகளின் தளபதி தலைமையிலான இலங்கையின் உயர் மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாகிஸ்தான் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.