Header Ads



இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிடக்கூடாது - ஹக்கீம்



யுத்தம் முடிவடைந்து, சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிடாமல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதேவேளையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளு மன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கதெனவும், அத்தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாமெனவும் நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி கடந்த 30 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் நீதி அமைச்சர் ஹக்கீமை கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான சேகுதாவூத், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் எட்மிரல் வசந்த கருணாகொட, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிடோ ஹொபோ ஆகியோரும் ஏனைய ஜப்பான் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் அமைச்சர் ஹக்கீமுடன் தாம் மேற்கொண்ட பல சந்திப்புகளை பற்றிக் குறிப்பிட்ட ஜப்பானிய விசேட பிரதிநிதி, குறிப்பாக அவருடன் தாம் விமானம் மூலம் கிழக்கு மாகாணத்திற்குச் சென்று நிலைமையை நேரில் அவதானித்ததையும் நினைவு கூர்ந்தார்.

அமைச்சர் ஹக்கீம் ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்ததாவது :-

இப்பொழுது நாட்டில் யுத்தம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கம் நாட்டில் பரவலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் அதேவேளையில் வடகிழக்கு மாகாணங்களுக்கு அவற்றில் முன்னுரிமை கொடுத்துள்ளது. இந்த வேளையில் நீண்ட நெடுங்காலமாக தீர்வு காணப்படாதிருக்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு மேலும் தாமதியாமல் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கோ, வேறெந்த பிரச்சினைகளுக்கோ நாட்டுக்கு வெளியே சர்வதேச சமூகமும், புலம்பெயர்ந்த மக்களும் தீர்வுகாண முற்படுவது நடைமுறை சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட தரப்புகள் பரஸ்பரம் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி உள்நாட்டிலேயே தீர்வுகளை எட்ட முடியும்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கதாகும். அத்தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து நிறைய பயனுள்ள தகவல்களை பெறக்கூடியதாக இருக்குமென்றும் அதில் பலவிதமான பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டு, விதந்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் நம்புகிறோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அவர்களுக்குமிடையில் புரிந்துணர்வும், நட்புறவும் நிலவுகிறது பரஸ்பரம் நாம் அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம்.

நாட்டில் சட்டமும், ஒழுங்கும் பேணப்பட்டு வருகிறது. முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அவர்களது நீதிமன்றங்களும், பொலிஸ் நிலையங்களும் செயல்பட்டு வந்த நிலையில் முற்றாக மாறி தற்பொழுது முழு நாடும் ஒரே நீதி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.