Header Ads



வடமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை



விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதைத் தடுக்கும் "நாசிவாத' அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது என்று அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தினார். புலம்பெயர் புலி பிரிவினைவாதத்திற்கு துணை போகும் அமெரிக்காவிற்கு கூட்டமைப்பும் விலை போயுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மின்சக்தி மற்றும் மின் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அன்று புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்து அடிபணிந்தே கூட்டமைப்பினர் வடகிழக்கில் தமது அரசியலை முன்னெடுத்தனர். காணிகளை பலாத்காரமாக கைப்பற்றி, சிங்கள, முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றினர். 

அது மட்டுமல்ல மக்களுக்கு வரும் கடிதங்களையும் புலிகள் திறந்து வாசித்த பின்னரே கையளித்தனர். இவ்வாறு புலிப் பயங்கரவாதம் ஆயுதங்களால் அடக்கி வைத்திருந்தது. ஆனால் எமது படையினர் தமது உயிர்களை அர்ப்பணிப்புச் செய்து வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தனர். கூட்டமைப்பினர் எவரும் உயிர்த் தியாகம் செய்து வடபகுதி மக்களை பாதுகாக்கவில்லை. இன்று கூட்டமைப்பினரால் தேர்தல் காலங்களில் சுதந்திரமாக பிரசாரங்களை மேற்கொள்ள முடிந்துள்ளது. போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. புலிகளால் சேதமாக்கப்பட்ட பாதைகள் சீர் செய்யப்படுகின்றன. மக்களுக்கு மின்சாரம் அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளது. 

வட பகுதியின் பொருளாதார அபிவிருத்தி நூற்றுக்கு 22 வீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் திட்டங்களால் மக்கள் பலமடைந்து வருகின்றனர். 

இதனைக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை. தமிழ் மக்களின் முன்னேற்றம் கூட்டமைப்பின் அரசியல் இருப்பைத் தகர்த்து விடும் என்பதால், தமிழ் மக்களைத் தொடர்ந்தும் இருட்டிலே வைத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் விரும்புகின்றனர். இதுவரை காலமும் இந்தியாவின் பின்னால் சென்ற கூட்டமைப்பு தற்போது இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போகும் அமெரிக்காவிற்கு விலை போயுள்ளது.

அமெரிக்கா தனது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் வீழ்ச்சி கண்டு வருகிறது. இவ்வாறானதோர் நிலையில் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்குகின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். 

சர்வதேச சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம். அதேவேளை புலிகளால் வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதை கூட்டமைப்பினர் தடுக்கின்றனர். இது கூட்டமைப்பினரின்"நாசிவாத'' அரசியலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்றார். ___


No comments

Powered by Blogger.