Header Ads



வடக்கில் இந்தியாவின் 50.000 வீடுகள் - என்னதான் நடக்கிறது..?


இந்திய அரசால் இடம்பெயர்ந்த குடும்பங்களிற்காக வழங்கப்பட்டிருந்த 50,000 வீடுகளில் இதுவரை 50 வீடுகள் மட்டுமே முழுமையாகப் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்னர் சண்டேலீடருக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்திருந்தார். 

"எமது வட்டாரத் தகவல்களின் பிரகாரம், கடந்த மாதம் சிறிலங்காவிற்கு இந்திய வெளியுறவுச் செயலர் வருகை தந்திருந்த போது 50 வீடுகள் மட்டுமே முழுமையாகப் பூர்த்தியாக்கப்பட்டிருந்தது" என சம்பந்தன் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்பு கொண்ட போது, வீடுகளைக் கையளிப்பதற்குப் பொருத்தமான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அரசாங்க அமைச்சர்கள் தமது செல்வாக்கைப் பிரயோகித்தமையே இதற்கான காலதாமதமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

"உண்மையில் இந்த வீடுகளை மிகவும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மட்டுமே கையளிக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் விருப்பமாகும். ஆனால் இதற்கான பயனாளிகள் பட்டியல் நேர்மையான முறையில் தயாரிக்கப்படவில்லை" என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டின் யூன் மாதத்தில் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்தியாவிற்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போதே 50,000 வீட்டுத் திட்டம் தொடர்பான தகவல் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது. 

தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் முதல் 1000 வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு முன்மாதிரித் திட்டமாகும் என சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையகம் அறிவித்துள்ளது. ஆனால் 50 வீடுகள் மட்டுமே பூர்த்தியாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை இவ் ஆணையகம் மறுத்துள்ளது. 

இவ்வாயிரம் வீடுகளும் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 27 இடங்களில் கட்டப்படுவதற்காக இந்திய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"இக்கட்டுமான வேலைத் திட்டமானது மிகவும் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே வீடுகளைக் கட்டுகின்ற நிறுவனத்தினர் பெரும் கடினங்களை எதிர்கொண்டே இவற்றை மேற்கொள்கின்றன" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வீட்டுத்திட்டத்திற்கான அனைத்து வேலைகளும் முழுமையாக்கப்பட்டவுடன், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த வீடுகள் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

"நாங்கள் வீடொன்றிற்குத் தேவையான பிற வசதிகள் அனைத்தையும் செய்து முடித்த பின்பே அதனைக் கையளிக்க விரும்புகின்றோம். அதாவது வீதிகள், மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் இவற்றுள் உள்ளடங்குகின்றன" என இந்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"இவ்வீடுகளைக் கையளிப்பதற்கான பயனாளிகள் இந்தியா, சிறிலங்கா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர். தற்போது, சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளிலேயே தற்போது இவ்வீடுகள் கட்டப்படுகின்றன" எனவும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட ஏனைய 49,000 வீடுகளின் நிலவரங்கள் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, "பெரும்பாலான பயனாளிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத்தை அடிப்படையாகக் கொண்டு தமக்கான வீடுகளைத் தாமாகவே கட்டுவர்" எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

"அதாவது பெரும்பாலான பயனாளிகள் இவ்வீடுகளைத் தாமாகவே கட்டிக் கொள்வதற்கான இயலுமையைக் கொண்டுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், தற்போது மக்களுக்கு வீடுகள் அதிகம் தேவைப்படுவதால் இந்திய அரசாங்கம் தற்போது செய்வதற்கப்பால் கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.