Header Ads



யாழ்ப்பாணத்திற்கு 3 மணித்தியாலத்தில் போகலாம் - மஹிந்த கூறுகிறார்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று, நான்கு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜனாதிபதி கூறினார். இந்த நெடுஞ்சாலை வடக்கும், கொழும்பும் ஒன்றிணைவதற்கும் அவற்றுக்கிடையிலான பயணத்தூரம் சுருங்குவதற்கும் வழிவகுக்கும். அப்போது பிரிவினை என்ற சிந்தனையே எழாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நவீன பாதைகள் அமைக்கப்பட்டு பிரதேசங்களுக்கான எல்லைகள் சுருக்கப்படும் போது நாட்டில் பிரிவினை வாதமும் பிரதேச வாதமும் இல்லாதொழியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பாதை நவீனமயப்படுத்தப்பட்டு மூன்று மணித்தியாலமாகப் பயணம் சுருங்கும் போது எல்லைகள் என்பதற்கே இடமில்லை.இடைவெளிகள் குறைந்து மனங்கள் இணையும் போது பிரிவினைக்குத் தீர்வு இயல்பாகவே கிட்டிவிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து காலி கரந்தெனியவில் நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையோடு கட்டுநாயக்கா - கொழும்பு, கண்டி - கொழும்பு, திரு கோணமலை - கொழும்பு, யாழ்ப்பாணம் - கொழும்பு என சகல நெடுஞ்சாலைகளும் நவீனமயப்படுத்தப்படும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்ல 8 மணித்தியாலம் செலவாவதால் தான் பிரிவினை கோருகின்றனர். நவீன பாதை மூலம் 3 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்ல முடியுமானால் பிரிவினை தேவையில்லை. அப்போது எல்லைகளும் இருக்காது. நாட்டு மக்களின் மனங்களும் இணைக்கப்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும். பிரிவினை வாதம், பிரதேச வாதத்திற்கு சிறந்த தீர்வு இதுவே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் பல வீதிகள் பெருந்தொகை நிதி செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 2012 ஆம் ஆண்டுக்காக 78 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.