Header Ads



யாழ் முஸ்லிம் உம்மத் - சுய விசாரணையும் சுய மதிப்பீடும் (பகுதி -1)

அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் சமூக நடத்தைகள் குறித்த ஒரு மீளாய்வு மிகவும் அவசியப்படும் தருணம் இது, ஏனெனில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிந்தித்துவப்படுத்தும் அமைப்புகள் கூட்டாக  யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஒரு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நாம் இப்போதிருக்கின்றோம். 

சம்மேளனம் குறித்தும் எமது சமூக நடத்தைகள் குறித்தும் நாம் மிகச்சரியாகப் புரிந்துகொள்வது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. குருடர்கள் கண்ட யானைக்கு ஒப்பானதாக எமது சமூக நடைத்தை தொடர்பான பார்வை மாறிவிடுவதற்கு முன்னர் இது குறித்த விழிப்புணர்வு அவசியமாகின்றது.
யாழ் முஸ்லிம்களின் சமூக நடவடிக்கைகள்:

யாழ் முஸ்லிம்களின் சமூக நடவடிக்கைகள் எந்தச்சமூகத்துடனும் ஒப்பிட்டு நோக்க முடியாத அளவிற்கு மாறுபட்டவை. சமூகவியல் ஆய்வாளர்களுடன் யாழ்ப்பாண முஸ்லிம் சமூக மாதிரிகள், தன்மைகள் குறித்து கலந்துரையாடியபோது சில முக்கியமான விடயங்களை கண்டுகொள்ள முடியுமாக இருந்தது.

      நெருக்கமான சமூகப்பரம்பல்
      ஒரே மாதிரியான தொழில் முயற்சிகள்
      ஒரே மாதிரியான உணவு, உடை, சமூகப்பழக்க வழக்கங்கள்
      ஒரே மாதிரியான சிந்தனை, நடத்தைப்பாங்கு

என்பன கொண்ட ஒரு சமூக அமைப்பில் அதிகாரம் நோக்கிய போட்டியானது மிகக்கடுமையானதாக இருக்கும் அதேவேளை, சமூக ஒற்றுமை அல்லது ஒற்றுமை நோக்கிய முயற்சிகள் சாதகமான சமிக்ஞைகளைக் கொண்டிராது. சமூகத்தின் தேவைகளை சீராக இனங்காண்பதிலும், அவற்றை சமூக முயற்சிகளினூடாக அடைந்துகொள்வதும் சாத்தியப்படும் நிலையிலிராது.

பாரிய அடிப்படையில் சமூகத்தை பிரித்துக்காட்டும் அடையாளங்கள் இல்லாமையால் சிறிய அற்பத்தனமான விடயங்களின் அடிப்படையில் குறித்த சமூகம் தன்னைப் பிரித்து தனித்து அடையாளப்படுத்த முயற்சிக்கும், அதாவது மொழி ரீதியாக, அல்லது நிற ரீதியாக சமூகத்தை பிரிக்க முடியாதுபோயின் குல கோத்திர ரீதியாக சமூகத்தை அடையாளம் காண முடியாது போயின் அந்தச்சமூகத்தின் அதிகார வர்க்கம் அற்பத்தனமான காரணிகளின் அடிப்படையில் சமூகத்தை பிரித்து அடையாளப்படுத்த முயற்சிக்கும். வதிவிடங்கள், சுற்றுச்சுழல் அல்லது தெரு, பள்ளிவாயல்கள் அல்லது கூடும் மத்திய நிலையங்கள், சிறியரக கருத்துவேறுபாடுகள் போன்ற அற்பத்தனமான அடிப்படைகளில் சமூகம் பிரித்து நோக்கப்படும், எனவே இங்கே தலைமைத்துவம் என்பது ஒரு மையப்புள்ளியில் இன்றி பலவீனமான பல மையப்புள்ளிகளின் தரித்து நிற்கும்.

அறிவிற்கும் சிந்தனைக்கும் முக்கியத்துவமற்ற நிலை காணப்படும். இவ்வாறு பல்வேறு பிரிவுகளைக்கொண்ட சமூக ஒழுங்கில் அறிவும் சிந்தனையும் செல்லாக்காசுகளே, ஏனெனில் அவர்களது குறுகிய இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அறிவானது அவசியப்படாது. தமது தனையர்களை தமது வழியிலேயே பின்துயரவைப்பது தந்தையரின் விருப்பாகவிருக்கும். அத்தோடு குடும்ப ரீதியான முரண்பாடுகள் மலிந்திருக்கும். சடங்கும் சம்பிரதாயங்களும் முதன்மைபெறும் அளவிற்கு சிந்தனை முக்கியத்துமளிக்கப்படமாட்டாது. அத்தோடு பெண்கள் மீதான வன்முறைகளும் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் காணப்படும். இத்தகைய காரணிகள் அறியாமையின் வெளிப்பாடாகவே வேரூண்டுகின்றன.

1990ல் நாம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது இத்தகைய அடையாளங்களையும் தன்மைகளையும் சுமந்தவர்களாகவே இருந்தோம். இதன் காரணமாகத்தான் எமக்கிடையே பிளவுகளும் பிரிவுகளும் போட்டித் தன்மைகளும் வெகுவாகக் காணப்பட்டன. அப்போது எமது தலைவர்கள் என்று தெளிவாக அடையாளப்படுத்தும் வகையில் எவருமிருக்கவில்லை. சமூகப்பணிகள் யாவும் சமூக உணர்வால் தூண்டப்பட்ட ஒருசிலரால் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டன. அவை ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன அமைப்பைக் கொண்டிருக்கவில்லை.

வெளியேற்றத்தின் பின்னரும் எமது சமூகத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள், தேவைகள் எம்மிடையே சமூக அமைப்புகளை உருவாக்கின, ஒரு சில சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன அவை அதிகாரத்தை நோக்கிய முன்னெடுப்புகளாகவும் அதிகார முனைப்புக் கொண்டதாகவுமே காணப்பட்டன.

வெளியேற்றத்தின் பின்னரும் கூட யாழ்ப்பாண சமூகத்தில் உருவெடுத்த எந்தவொரு சமூக அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஒரு சிலரின் சமூக உணர்வால் ஏற்படுத்தப்பட்ட குறித்த அமைப்புகள் ஒரு சிலரின் முயற்சிகளை மாத்திரம் சுமந்தனவாகவே தொடர்ந்தும் செயற்பட்டன, குறித்த நபர்கள் தமது சமூக முயற்சியிலிருந்து ஓய்வு பெறும்போது அல்லது களைப்படையும்போது குறித்த சமூக அமைப்பு சமூகப்பரப்பிலிருந்து இறந்துவிடுவதை அல்லது மௌனமாகிவிடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு கடினமான செயற்பாடாகும், சூறா அமைப்பானது, அல்லது கலந்தாலோசித்து முடிவுகளைப்பெறும் தன்மையானது எம்மவரிடம் மிகவும் குன்றியதாகவே காணப்பட்டது.

10,000 வாக்காளர்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் 5ற்கும் மேற்பட்ட பலமான அரசியல் கட்சிகள் செல்வாக்குச்செலுத்த முனைந்தன. 10ற்கும் அதிகமான சமூக அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த முனைந்தன, எண்ணிலடங்காத தனிநபர்கல் தாமே தலைவர்கள் என்று அடையாளப்படுத்தினர். இதன் விளைவாக சமூகப்பிளவுகள் அதிகரித்தன. சமூகத்தை எந்த இலக்கு நோக்கி நகர்த்துவது மிகவும் பொறுத்தமானது எனத் தீர்மானிப்பது மிகவுமே கடினமான விடயமாக மாறியது. இதன் விளைவாக சமூக ஒழுங்கு முற்றாக சீர்குலைந்தது. மக்கள் தமக்கென ஒரு ஒழுங்கை வகுத்துக்கொண்டார்கள், மக்கள் எதற்குக் கட்டுப்படுவது என்று சிந்தித்தார்கள், இறுதியில் அவர்கள் பௌதீக அடிப்படையில் சுயமாக முடிவுகளை மேற்கொண்டார்கள், “பௌதீக ரீதியான நலன்கள் யாரிடமிருந்து எமக்கு வருகின்றனவோ அவற்றைப் பெற்றுக்கொள்வதும், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தம்மை இடம்மாற்றிக்கொள்வதும்” என்ற நிலையை நோக்கி நகர்ந்தார்கள்.

இதன் பாரதூரத்தை அறியாத அமைப்புகளும் அரசியல் வாதிகளும் சமூகத்தலைமைகளும், மக்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும், அது சிறியதோ பெரியதோ, தற்காலிகமானதோ நிரந்தரமானதோ என்றெல்லாம் சிந்திக்காமல், மக்களை விலைபோகும் பொருட்களாகக் கருதி, “இலை குலையைக்காட்டி மேய்க்கப்படும் மந்தைகளைப்போல யாழ்ப்பாண முஸ்லிம் மக்களையும் அங்கும் இங்குமாக இழுத்துச்சென்றார்கள். அதன் விளைவாக இன்று மக்கள் பொருள் சார்ந்த அடைவுகளை நோக்கி ஆர்வம் காட்டும் நிலை தோன்றியுள்ளது.

ஒரு கொள்கையின்பக்கம் , ஒரு இயக்க ஒழுங்கின்பக்கம் , அரசியல் சிந்தனைகளின் பக்கம், இஸ்லாமிய வழிமுறைகளின்பக்கம்,  உரிமைப் போராட்டங்களின்பக்கம், எமது சமூகத்தை அழைப்பதும், வழிநடாத்துவம் இன்று கல்லில் நார் உரிக்கும் கதையாகிப்போனது.  எனவே 1990 வெளியேற்றம் எம்மை சிதைத்ததைவிடவும் நாம் மேலே சொன்ன சமூக நிலைமையானது எமது சமூகத்தை மிகவும் கேவலமான இழிநிலைக்குக் கொண்டுசென்றிவிட்டது, என்ற உண்மையை நாம் கசப்பாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். (1990ல் வெளியேற்றப்பட்ட மன்னார் எருக்கலம்பிட்டி சமூக அமைப்பின் மாதிரிகளை நோக்கின் அவை எமக்கு நேர் மாற்றமாக இருப்பதைக்காண முடியும்) இதுதான் எமது சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினை.

சீரழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுகொண்டு, இதனை ஒழுங்குபடுத்துவது குறித்து சிந்தித்தபோது எம்முள் பின்வரும் கேள்விகள் எழுந்தன

·         யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தும் செயற்பட்ட சமூக அமைப்பு எது?

·         யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாம் மற்றும் ஜனநாயகத் தன்மையுடன் கூடிய தலைமைத்துவம் யார் வசமிருந்தது?

·         ஏராளமான அமைப்புகள் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் இயங்குவதாக அறிகின்றோமே அவை எவை? அவற்றின அடைவுகள் எத்தகையது?

·         யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப்பிரச்சினைகள் எவை, அவை குறித்து கவனம் செலுத்துவது யார்?

·         யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு எத்தகையது?

·         ஒரு சிறிய சமூகத்தை சீரான பாதையில் முதன்மையாகக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் இங்கே காணப்படுகின்றதா?
போன்ற கேள்விகளுக்கு சாதகமான அல்லது திருப்திப்படும் பதில்களை எம்மால் கண்டுகொள்ள முடியாதிருந்தது.

ஒருபக்கம் சீரழிக்கப்பட்ட சமூகம்; மறுபக்கம் சாதகமற்ற பதில்கள். இவைதான் சம்மேளனம் குறித்த எண்ணக்கருவை எம்முள் ஏற்படுத்தியது. சமூகத்தை சீராக அறிந்துகொள்வதற்கும், அங்கே புரையோடிப்போயிருக்கும் நோய்களைக் கண்டுகொள்வதற்கும், சமூகத்தில் தலைவர்கள் என்ற அடையாளத்துடன் இருப்பவர்களை, சமூகத்தின் நலனின் ஆர்வத்துடன் இருப்பவர்களை ஒரு இடத்தில் அழைத்து, சமூத்தின் நிலைகளை அவர்களுக்கு உணர்த்துவதோடு சமூகத்தை எவ்வாறு சிறப்பான வழிமுறைகளினூடாக வழிநடாத்தலாம் என்ற அறிவை சிந்தனையை, பயிற்சியை, மனோவலிமையை, திறன்களை அவர்களுக்கு வழங்குதல் எமது பிரதானமான நோக்கமாக இருந்தது. இதன்மூலம் சமூகத்தை சரியாக உணர்ந்துகொண்ட சமூகத்தை வழிநடாத்தும் சரியான முறையைத் தாமாகவே அடையாளப்படுத்திய சமூகத்தலைவர்கள் உருவாகுவார்கள் என்பதும் எமது எண்ணமாகும். இத்தகைய உயர்வான எண்ணங்களோடு எமது ஒருவருடப் பயணம் தொடக்கப்பட்டது, அது பல்வேறு சுவாரஷ்யமான அனுபவங்களை எமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றது.

கவனத்திற்கு -  எல்லா நாட்களையும்போல இன்றும் நன்றாக வாசித்தோம், சூடுபறக்கின்றது என்று மனதிற்குள் ஏதோவொன்றை நினைத்துக்கொண்டு ஒதுங்கியிருக்கவேண்டாம், உங்களது மேலான கருத்துக்களை தைரியமாக முன்வையுங்கள், கருத்துக்களால் வாதப்பிரதிவாதங்கள் செய்யுங்கள் அதுவே எம்மை மேலும் பலப்படுத்தும்.

No comments

Powered by Blogger.