Header Ads



‘Eating Buriyani, Voting UNP’ - மஹிந்தவிற்கு ஒரு மடல்

ஜனாதிபதி அவர்களுக்கு,

முஸ்லிம்கள் புரியாணி தருவார்கள், வாக்குத் தர மாட்டார்கள் என நீங்கள் கூறியதாக நவமணியில் வந்திருக்கும் தகவல் உண்மையாயின், அது மிகுந்த வேதனைக்குரியது. நீங்கள் ஒருவேளை போகிற போக்கில் நகைச்சுவையாக இதை சொல்லியிருக்கக் கூடும். ஆயினும், ஜனாதிபதி போன்ற பொறுப்பு வாய்ந்த ஒருவரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவது மிகவும் பாரதூரமானது. அதிலும் சிறுபான்மையினர் தொடர்பாகப் பேசும்போது உங்களைப் போன்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அதிக முன்னெச்சரிக்கை தேவை. இதை நீங்கள் உணராதவருமல்ல.

ஏற்கனவே, முஸ்லிம் வாக்காளர்களது நடத்தையை ‘Eating Buriyani, Voting UNP’ என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. ஆனால், இதில் இப்போது தெளிவான மாற்றங்கள் தெரிகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் வருகையின் பின்னர், ஐ.தே.க.வுக்கு ஆதரவளிக்கும் நிலையிலிருந்து கிழக்கு முஸ்லிம்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினர்.

வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐ.தே.க. விற்கு ஆதரவளிப்பதே பொது வழக்காக இருந்து வந்தது. ஆனால் இப்போது அதில் துல்லியமான மாற்றங்கள் தெரிகின்றன. இப்பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸும் ஓரளவு வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. இதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஜனாதிபதி அவர்களே! சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முஸ்லிம்கள் பாரம்பரியமாக ஆதரிக்க தயங்கி வந்தது உண்மைதான். ஆனால், இப்போது அதில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்திற்கு  இந்த மூன்றாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையே எடுத்துக் கொள்வோம். தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 28 பேர் ஆளுங்கட்சி சார்பானவர்கள். ஐ.தே.க. சார்பாக 25 பேரே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மு.கா. சார்பாக 15 பேரும், துஆ சார்பாக ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 69 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர் என்ற தகவலை நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

அதிக கவனத்தை ஈர்த்தது கொழும்பு மாநகர சபைத் தேர்தல்தான். நீங்கள் கூட கொழும்பு முஸ்லிம்களை மனம் வைத்துத்தான் இந்த வார்த்தைகளைக் கூறியுள்ளீர்கள். இந்த வார்த்தைகளைக் கூறும்போது, கொழும்பில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, கணிசமான தமிழர்களும் ஐ.தே.க.வை ஆதரித்துள்ளனர் என்பதை நீங்கள் கருத்தில் கொண்டீர்களா? மு.கா. மேயர் வேட்பாளர் ஷபீக் ரஜாப்தீனே இங்கு தோல்வியுற்றார். அது மட்டுமா, உங்கள் கட்சியில் இரண்டாவது இடத்தில் இருப்பது அஸாத் ஸாலிதானே?

ஒரு காலத்தில் சுதந்திரக் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் ஹலீம் இஷாக்கும் அலவி மௌலானாவும் பௌஸியும் மட்டும்தானே ஞாபகத்திற்கு வருவர். இப்போது எத்தனை பேர் உள்ளனர். முஸ்லிம்களது ஆதரவு ஒப்பீட்டளவில் பெருமளவு உங்களுக்கு கிடைத்து வருகிறது என்பதை நீங்கள் மனம்கொள்ள மறந்தது ஏன்?

No comments

Powered by Blogger.