Header Ads



அமெரிக்காவில் தொடருகிறது போராட்டம் - பலர் கைது

உலகம் முழுவதிலும் "ஆக்கிரமிப்பு' போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். "வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் உத்வேகத்தால், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் "ஆக்கிரமிப்பு' போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நியூயார்க், பிராங்பர்ட், லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டு தங்கள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் கடந்த இருநாட்களாக, எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப் புயல் வீசத் துவங்கியுள்ள நிலையில், "ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் வேகம் சற்று குறைந்திருக்கிறது. ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் பகுதியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பூங்காவில் தங்கியுள்ளனர். அதற்கு மேல் வேறு பூங்காக்களை ஆக்கிரமிக்கக் கூடாது என, போலீசார் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், போலீசார் விடுத்த ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஜேமிசன் பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் குவியத் துவங்கினர். தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் 39 பேரும், டென்னிசி மாகாணத்தில் நாஷ்வில்லேயில் பலரும் கைது செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.