டுனீசியாவில் இஸ்லாமிய சார்பு அரசாங்கம் சாத்தியமா..?
ஆப்ரிக்க நாடான டுனீசியாவில் நடந்த முதல் தேர்தலில், என்னஹ்தா கட்சி கணிசமான இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.அரபு புரட்சிகளுக்கு வித்திட்ட டுனீசியாவில், அரசியல் அமைப்பு சபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், பல கட்சிகள் போட்டியிட்டன. பென் அலி அதிபராக இருந்த போது தடை செய்யப்பட்ட என்னஹ்தா கட்சியும் இதில் போட்டியிட்டது.தேர்தலின் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்புகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், மொத்தம் உள்ள 217 இடங்களில் என்னஹ்தா, 90 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, குடியரசு காங்கிரஸ் கட்சி 30 இடங்களையும், இடதுசாரியான எட்டகடோல் கட்சி 21 இடங்களையும் பிடித்துள்ளன.இஸ்லாமிய கட்சியான என்னஹ்தா வெற்றி பெற்றாலும், அரசியல் அமைப்பு சபையை அமைக்க, இன்னும் கூடுதலான இடங்கள் தேவைப்படுவதால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பேச்சு நடத்தி வருகிறது.
இக்கூட்டணி அமைக்கும் அரசியல் அமைப்பு சபை, இன்னும் ஓராண்டிற்குள், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்; இடைக்கால அரசுக்கு ஒரு அதிபரை நியமிக்கும்.வெற்றி குறித்து பேட்டியளித்த என்னஹ்தா கட்சி தலைவர் ரசித் கன்னவுச்சி,"சுதந்திர, வளர்ச்சி மிக்க டுனீசியாவை உருவாக்கும் வகையில் நடந்த புரட்சியின் குறிக்கோளை நோக்கி, என்னஹ்தா நாட்டைக் கொண்டு செல்லும்' என்றார்.என்னஹ்தா, அடிப்படையில் இஸ்லாமிய கோட்பாடுகளைக் கொள்கையாகக் கொண்டிருந்தாலும், டுனீசியாவின் மதச் சார்பற்ற நிலையைத் தொடர்ந்து கடைபிடிக்கும் என கன்னவுச்சி உறுதியளித்தார். எனினும், ஆட்சிக்கு என்னஹ்தா கொள்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என, பலர் சந்தேகப்படுகின்றனர்.
இந்நிலையில், 19 இடங்களில் வெற்றி பெற்ற, "பாப்புலர் லிஸ்ட்' கட்சி, ஆறு இடங்களில் பெற்ற வெற்றி செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்ததையடுத்து, அக்கட்சியினர் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர், சிதி பவுஜித் நகரில் நேற்று திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடைகள், வீடுகளின் கதவுகள், ஜன்னல் கதவுகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால், சிதி பவுஜித் நகரில் பதட்டம் நிலவியது.
Post a Comment