Header Ads



கடாபியின் படுகொலை - இஸ்லாமிய அறிஞர்களிடையே முரண்பாடு

கடாபியின் இறந்த உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவித்துள்ளது. சிலர் இதனை இஸ்லாமிய போதனைகளை மீறும் செயல் எனப்பார்க்கும் அதேநேரம் இன்னும் சிலர் கடாபி ஒரு காபிர் எனத் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு மனிதனுடைய இறந்த உடலையும் உதாசீனப்படுத்துவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என எகிப்பது அல்-அஸ்ஹர் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் மஹ்மூத் ஆசூர் தெரிவித்துள்ளார்.

கடாபி மரணமடைந்து நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் அடக்கம் செய்யப்படாத அவரது உடலை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தமது கையடக்கத் தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ செய்தும் வருகின்றனர். புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதும் வீடியோக்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

ஒரு இறந்த உடலைச் சுற்றி நிகழும் இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரண்பட்டதாகும். இறந்த உடலுக்குக் கொடுக்க வேண்டிய கௌரவத்தைக் கொடுப்பது அவசியமாகும் என அஷ்-ஷெய்க் மஹ்மூத் ஆசூர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கடாபியின் மரணம் தொடர்பாக லிபியாவின் பிரதம முப்தி அஷ்-ஷெய்க் சாதிக் அல்-கர்யானி வித்தியாசமான கருத்தைத் தெரிவிதுள்ளார். கடாபி ஒரு காபிர் என்றும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படப் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடாபிக்கு தொழுகை நடத்தாதிருப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. எனவே, இவ்வாறான ஏனைய ஆட்சியாளர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடாபி ஒரு காபிர் எனத் தெரிவித்திருக்கும் முப்தி அல்-கர்யானி முஸ்லிம் பொதுமக்களோ, முஸ்லிம் அறிஞர்களோ அல்லது பள்ளிவாசல்களோ இவருக்காகத் தொழுதை நடத்துவது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனைச் செய்வதாயின் அவரது குடும்பத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபி அவருடைய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு எதிராக செயற்பட்டுடிவந்தார். ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தார். அவரது சொல்லும் செயலும் அவர் ஒரு முஸ்லிம் இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தையும் இஸ்லாமிய கிரியைகளையும் மிக மோசமாக விமர்சித்தும் மறுத்தும் வந்த கடாபி ஒரு முர்தத் என 30 ஆண்டுகளுக்கு முன்னரே சவூதியைச் சேர்ந்த உலமாக்கள் பத்வா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.