Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் விவகாரம்

முஹம்மத் ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் அதிபராக மர்ஹும் சி.எம்.ஏ. ஜிப்ரி அவர்கள் கடமையாற்றினார்கள். அவரைத் தொடர்ந்து எம்.எம். யூசுப் ,எம்.எம். குத்தூஸ் ,எம்.ஏ.ஆர்.அப்துல் ரஹீம் , ஏ.எச் ஹாமீம் போன்றவர்கள் சிறந்த நிர்வாகத்தை நடத்தினர். 1990 ஓக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது முதல் 2002 வரை பாடசாலை இயங்கவில்லை.

2002 இல் மீளக்குடியேறிய முஸ்லிம் மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக இது மீண்டும் இயங்க ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் அதன் அதிபராக முபாரக் அவர்கள் செயற்பட்டார். இவர் எந்த ஆசிரியரும் யாழ் செல்லத் தயங்கிய ஒரு காலத்தில் இந்தப் பதவியை ஏற்றதன் மூலம் பெரும் தியாகமொன்றைச் செய்துள்ளார்.

இன்று இப்பாடசாலை அதிபர் பதவியை அடைவதற்காக ஏ.சி. ஜலீல் என்பவர் முயன்று வருகின்றார். ஜலீல் ஒரு தகுதி பெற்ற அதிபராக இருந்தாலும் இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்நிலையில் முபாரக் மௌலவியிடமிருந்து அதிபர் பதவியை பறித்து இவருக்கு வழங்கினால் 8 மாதங்களில் ஜலீல் அவர்கள் ஓய்வு பெறும் போது அதிபர் பதவியை பொறுப்பேற்க யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் பாடசாலையில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் ஆசிரியர் ஒருவருக்கே அதிபர் பதவி போகும் வாய்ப்புள்ளது. மேலும் 8 மாதத்துக்குள் எந்த அதிபராலும் எதையும் சாதிக்க முடியாது. ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அதிபராக வருபவர் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்கள் பணியாற்றினாலே அங்கு அவரால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். எனவே ஜலீல் அவர்களை அதிபராக்கும் முயற்சி புத்திசாலித்தனமானது அல்ல.

இலங்கையில் பல சிறந்த அதிபர்கள் உள்ளனர். ஆகக்குறைந்தது ஐந்து வருடங்கள் கடமையாற்றக் கூடிய ஒருவரைத் தேடி அதிபர் பதவியை கையளிப்பதே சாலச் சிறந்த செயல்.

 இவ்விடத்தில் ஒஸ்மானியாவின் முன்னாள் அதிபர் மர்ஹும் ஹாமிம் பற்றி குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன். 1982இல் ஒஸ்மானியாவில் ஆறாம் வகுப்புக்காக அனுமதி கிடைத்த போது அப்பாடசாலையின் அதிபராக ஜனாப் அப்துல் ரஹீம் அவர்கள் இருந்தார்கள். மூன்று மாதத்தில் அவர் மாற்றலாகிச் சென்று விடவே கே. எம். சாஹுல் ஹமீது அவர்கள் பதில் அதிபராக கடமையாற்றினார். ஒக்டோபர் ; மாதமளவில் ஹாமீம் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். எனது ஆறாம் ஆண்டு தேர்ச்சி அறிக்கையில் மூன்று தவணைகளுக்கும் மூன்று பேர் அதிபர்களாக கையெழுத்திட்டுள்ளது இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது.

ஹாமீம் ஆசிரியர் பதவியேற்ற புதிதில் பாடசாலை உதைபந்தாட்ட அணிக்காக நான் பின்னனியில் (டிபன்ஸ்-தற்காப்பு)விளையாடினேன். ஆரம்பத்தில் எனது விளையாட்டை கவனிக்க அவருக்கு நேரமிருக்கவில்லை. ஆனால் நான் தனிப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது எனது விளையாட்டை அவதானித்த ஹாமீம் அவர்கள் அடுத்த ஆண்டு உதைப்பந்தாட்டப் போட்டிகள் வந்த போது என்னை முன்னனியில் (போர்வர்ட்) விளையாடுமாறு பணித்தார். முதல் போட்டியிலேயே கொக்குவில் இந்து அணிக்கெதிராக நான் மூன்று கோல்களை போட்டேன். என்னை வாழ்த்திய அதிபர் போர்வர்ட் தான் நீ விளையாட வேண்டிய இடம் என்று கூறிவிட்டுச் சென்றார். முன்னனியில் எனது விளையாட்டை கண்ட யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகமும் எனக்கு முன்னனியில் விளையாட வாய்ப்பைத் தந்தது. 14 வயதிலிருந்து பல போல்களை அடித்ததால் யாழ்ப்பாணத்திலேயே பெயர்பெற்ற ஒரு விளையாட்டு வீரனாக ஆகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவ்வாறு ஒவ்வொரு மாணவனையும் நுணுக்கமாக அவதானித்து அவனது திறமைகளை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர்அவரே.

1982 தொடக்கம் 1986 வரை ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து யாரும் பல்கலைக்கழகம் நுழையவில்லை. இதனை அவதானித்த அதிபர் ஹாமிம் அவர்கள் 1987ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கிருந்த நான்கு மாணவ பட்டதாரிகளை அழைத்து வந்து க.பொ.த உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு வர்த்தக மற்றும் கணிதத் துறைகளில் பாடம் நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் ௧௯௮௮, 989 ஆம் ஆண்டுகளில் பலர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகினர். 1989இல் தமிழ் தேசிய இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்கள் பிடிக்கும் செயல் இடம்பெற்றதனால் பல உயர்தர மாணவர்கள் யாழிலிருந்து வெளியேறியிருந்தனர். இதனால் இவரகளில் மூன்று போ; பரீட்சை எழுதும் வாய்ப்பைத் தவறவிட்டனர். அவர்களும் பரீட்சை எழுதியிருந்தால்பலர் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றிருப்பர். இந்த வகையில் இவரது நிர்வாகிக்கும் திறமை அவருடைய காலத்து மாணவர்களாலும் பெற்றோராலும் மிகவும் பாராட்டப்பட்டது. இன்றும் கூட அவர் நினைவு கூறப்படுகின்றார்.

ஒஸ்மானியா பாடசாலையை திறம்பட நடத்த வேண்டுமென சிந்திப்போர் செயற்படுவோர் எல்லோரும் சொல்லுவது என்னவென்றால் பாடசாலை அதிபரை மட்டும் மாற்றி கல்வித்தரத்தை உயர்த்த முடியாது என்பது தான். இன்று முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 160 பேர் யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். புதிதாக 80 மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அனுகி பகுதி நேர வகுப்புக்களை பாடசாலையில் நடத்துமாறு கேட்கலாம். அதற்காக வேண்டி அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்களை சம்பளமாக வழங்குவதனால் திறமையான ஆசிரியர்களை பாடசாலை பெற்றுக் கொள்ளும்.

அதேவேளை 8 மாதத்துக்கு ஒரு அதிபரை நியமிக்க முயற்சி செய்வதை விட நீண்ட காலம் சேவையாற்றக்கூடிய ஒரு அதிபரை தேர்ந்தெடுப்பதே தற்போது தேவையானது. அதே போன்று அஸ்செய்க் முபாரக் போன்றவர்கள் தொடர்ந்து பாடசாலைகளில் முக்கிய பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதனூடாக அவருக்கு ஆற்றல் உள்ள பாடங்களில் மாணவர்களை திறமை மிக்கவர்களாக மாற்றலாம். அவர் அதிபர் பதவியை சமூகத்துக்காகவே பொறுப்பேற்றார் என நினைக்கின்றேன்.

மேலும் யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் இருநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர் அக்கலாசாலையை அனுகி ஒஸ்மானியா பாடசாலைக்கும் பயிற்சி ஆசிரியர்களை அனுப்புமாறு கேட்டு அதனூடாகவும் கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்த்தலாம். நான் பாடசாலையிலிருந்த காலத்தில் அட்டாளைச்சேனை ஆசிரியா; கலாசாலையிலிருந்து வந்த முஸ்லிம் ஆசிரியா;கள் மூலம் கற்ற விடயங்களை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எனவே இருக்கக் கூடிய இலகுவான வழிகளை தேடி தற்போதுள்ள அதிபரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் செயற்பட முடியும்.

No comments

Powered by Blogger.