எனது பார்வையில் யாழ் முஸ்லிம் வலைத்தளம் - முஹம்மத் ஜான்ஸின்
முன்னொரு காலத்தில் மக்கள் செய்திகளை அறிவதற்காக பத்திரிகைகளை படிக்கும் பழக்கமிருந்தது. 1919 நவம்பர் ஆறாம் திகதி நெதர்லாந்நில் தான் முதன் முதலாக வானொலி ஒலிபரப்புச் சேவை பி.சி.ஜி.ஜி. என்ற நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. 1929இல் தான் முதன் முதலாக தொலைக்காட்சி ஒலிஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து 1995 ஆம் ஆண்டு இன்டர்நட் (வலையத்தளம்) யுகம் மலரும் வரை தொலைக்காட்சி வானொலி பத்திரிகை போன்றனவே செய்திகளை அறிவதற்காக மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. வலையத்தளம் அறிமுகமானதன் பின்னர் அது மக்களின் செய்திகளை அறிதல் தொடர்பான வாழ்க்கை முறையை முற்றாக மாற்றிவிட்டது. இன்று உலகத்தில் செய்திகளை அறிவதில் ஆர்வமாக உள்ளவர்களில் 90 விழுக்காடு மக்கள் இன்டர்நட்டையே உபயோகப்படுத்துகின்றனர்.
நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் என்று ஆரம்பித்த இணையத்தளங்கள் இன்று தனிநபர் இணையத்தளம் என்ற வரிசையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளது. இன்றைய உலகத்தில் 50 வயதுக்கு கீழ்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானவர்கள் இணையத்தளங்கள் மூலமாக செய்திகளை அறிகின்றார்கள். தகவல்களை பறிமாறிக் கொள்கின்றனர். இலங்கையில் செய்திகளை வெளியிடும் நூற்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன.
முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வழங்கக் கூடிய சில இணையத்தளங்களே உள்ளன. இந்த வகையில் யாழ் முஸ்லிம் கடந்த ஓராண்டுகளாக விரட்டப் பட்ட முஸ்லிம்களின் குரல்களை சர்வதேச ரீதியாக கொண்டு செல்வதில் பாரிய பங்களிப்புச் செய்து வருகின்றது.
எல்லா இணையத்தளங்களுக்கும் ஒரு வரலாறு இருப்பது போன்று யாழ் முஸ்லிம் இணையத்தளத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 18இக்கும் 30 இக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆயுத முனையில் புலிகளால் வெளியேற்றப்பட்னர். இச்செய்தியை அன்று முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்திருந்தன. ஆங்கில பத்திரிகைகளான சன்டே ஒப்சவ்வர் மற்றும் ஐலன்ட் என்பன முன்பக்கத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தன. இதன் பிறகு வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் சகல ஊடகங்களும் மௌனியாகவே இருந்து விட்டன. எமக்கு ஊடகங்கள் இல்லாத குறை இக்காலப்பகுதியில் தான் உணரப்பட்டது. சிலர் சில பத்திரிகைகளை ஆரம்பித்தனர். ஆனால் காலப்போக்கில் பல பத்திரிகைகள் காணமல் போயின. அதற்கு காரணம் நிதி வலப்பற்றாக்குறையும் முஸ்லிம் உம்மத்தின் ஆதரவின்மையும் தான். இந்தனை சவால்களையும் எதிர் கொண்டு இன்று வரை தாக்குப்பிடித்துள்ள பத்திரிகைகளாக மீள்பார்வையையும் நவமணியையும் குறிப்பிடலாம். ஆனால் அவை கூட வாரத்துக்கு ஒரு முறை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை என்ற அடிப்படையிலேயே வெளிவருகின்றன. இந்த வகையில் முஸ்லிம் உம்மத்துகளின் செய்திகளை நாளாந்தும் வெளிக்கொணரும் செயற்பாட்டில் லங்காமுஸ்லிம் இணையத்தளமும் யாழ் முஸ்லிம் இணையத்தளமும் வெற்றிநடை போடுகின்றன.
யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் தனித்துவம் என்னவென்றால் இது அதிகமாக வடமாகான முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்கின்றது. வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான வாசகர்களை இது கொண்டுள்ளதுடன் தினமும் பார்க்ப்படும் ஒரு இணையத்தளமாக இது மாறியுள்ளது. அதே வேளை இவ்விணையத்தளத்தில் இடப்படும் செய்திகள் புதிய செய்திகளை உள்வாங்கியதும் முகப்பு பக்கத்திலிருந்து தூக்கப்பட்டு விடுவது இந்த இணையத்தளத்தின் குறைபாடாகும். மேலும் எதிர்காலத்தில் இவ்விணையத்தளம் பல்வேறு மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலம் பிரென்சு டச்சு அறபி உருது போன்ற மொழிகளிலும் முழு உம்மத்துடைய செய்திகளையும் வெளியிட ஆவண செய்யப்பட வேண்டும். பல்வேறு மொழிகளிலும் செய்திகள் வெளியிடும் போது எல்லோரும் அதனை அறிந்து கொள்வதுடன் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதும் இலகுவாகிவிடும். இவ்விணையத்தளம் தனிப்பட்ட இணையத்தளமாக மாற்றப்பட்டு டாட் கொம் முகவரியின் பயணம் வர வேண்டும்.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இருபத்தியோராம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்விணையத்தளம் நடத்திய கவிதைப் போட்டிகள் பாராட்டத்தக்கது. இருப்பத்தியோராவது கருப்பு ஒக்டோபரை சர்வதேச மயப்படுத்த இவ்விணையத்தளம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.
இதன் இணையத்தளவாசிரியர் மிகுந்த சிறமத்துக்கு மத்தியிலேயே இதனைச் செய்வதை அறியமுடிகின்றது. அவருடைய பணியை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஆரோக்கியமான ஆயுளையும் நேரத்தையும் கொடுப்பானாக..!
Post a Comment