சர்வதேச நீதிமன்றில் சரணடைய தயார் - விமானம் கோருகிறார் கடாபியின் மகன்
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் செனூஸி சகிதம் தான் சரணடையத் தயாரென சயீவ் அல் இஸ்லாம் தெரிவித்திருப்பதாக இடைக்கால கவுன்ஸில் பேச்சாளர் கூறினார்.
அல் இஸ்லாமும் அல் செனூஸியும் கைது செய்யப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்கத்கது. கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியின்பொது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றுக்கு தன்னை கொண்டு செல்வதில் மூன்றாம் நாடொன்றின் (பெரும்பாலும் அல்ஜீரியா அல்லது டியூனிஷியா) பங்களிப்பு வேண்டுமென சயீவ் அல் இஸ்லாம் விரும்புவதாக லிபிய இடைக்கால கவுன்ஸில் வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. தனக்கு ஒரு விமானம் வேண்டும் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார் என அவ்வட்டாரம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும் கடாபியின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச சட்டத்தரணியொருவர் இடைக்கால கவுன்ஸிலின் தகவலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை சயீவ் அல் இஸ்லாம் சரணடைய முன்வந்தாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் அவர் மறுத்துள்ளார் எனவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சயீல் அல் இஸ்லாமின் இருப்பிடங்கள், முயற்சிகள் என்பன செய்மதி தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுவதாக அவ்வட்டாரம் கூறியுள்ளது
Post a Comment