Header Ads



பிரிட்டன் பிரதமரின் எச்சரிக்கை - இலங்கை என்னசெய்யும்..?

அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் இலங்கையில் நடைபெறும்போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டின் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டின் போது இலங்கையை எச்சரித்த பிரிட்டன் பிரதமர்,  உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு எதையும் மறைக்க வேண்டியதில்லை என்று தாம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாகவும் டேவிட் கமேரான் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடைபெறும் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை கனடா புறக்கணிக்கக் கூடும். இதுதொடர்பாக கனேடியர்களுடன் கலந்துரையடியுள்ளேன். நாம் அனைவருமே ஒரேவிதமான கண்ணோட்டத்துடன் தான் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். மனிதஉரிமைகள் விடயத்தில் இலங்கை நிறையவே செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிறைவே செய்ய வேண்டும். இது பற்றி மகிந்த ராஜபக்சவுடன் இங்கு (பேர்த்) கலந்துரையாடியுள்ளேன்.

அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்தப் போகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதஉரிமைகள் விடயத்தில் அதிக முன்னேற்றத்தைக் காண்பிப்பதன் மூலமே அதிகளவு நாடுகளை 2013 கொமன்வெல்த் மாநாட்டுக்கு அழைக்க முடியும்.

நான் கொடுத்த செய்தியைப் பாருங்கள். தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இருக்கிறீர்கள். பெருந்தன்மையைக் காண்பிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. நல்லிணக்க முயற்சிகளை காண்பிக்கவும், உலகிற்கு நிரூபிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. நீங்கள் எதையும் மறைக்க வேண்டியதில்லை. எதையும் நீங்கள் மறைக்கவில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். இலங்கை மீது இத்தகைய அழுத்தத்தை பயன்படுத்துவது முக்கியமானதாக உள்ளது“ என்றும் பிரித்தானியப் பிரதமர் கமரோன் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை பிரித்தானியா புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.