சவூதி அரேபியாவுக்கு புதிய இளவரசர்
சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சவூதியின் உள்துறை அமைச்சரான நயீப் (78) 1933ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் 1975 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மன்னர் அப்துல்லா மற்றும் காலஞ்சென்ற இளவரசர் சுல்தான் ஆகியோர் நாட்டில் இல்லாத போது ஆட்சிப்பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்று நடத்திய அனுபவமுள்ளவராவார்.
மேலும் அவர் இளவரசராக அறிவிக்கப்பட்டால் தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்ய வேண்டியிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரும் எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதியில் இன்றுவரையும் மன்னர் ஆட்சி நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment